விக்’கில் மறைத்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 5.55 கிலோ தங்கம் பறிமுதல் – 6 பேர் கைது

தமிழகம்

விக்’கில் மறைத்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 5.55 கிலோ தங்கம் பறிமுதல் – 6 பேர் கைது

விக்’கில் மறைத்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 5.55 கிலோ தங்கம் பறிமுதல் – 6 பேர் கைது

உளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் பெயரில் ஃபிளை துபாய் எஃப்இசட்8515 விமானத்தில் துபாயிலிருந்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மஹ்ரூப் அக்பரலி (39) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஹஸ்ஸன் ரஃபியுதீன் (26) ஆகியோர் விமான நிலைய சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்களது சிகை அலங்காரம் மீது சந்தேகம் எழுந்தது. அவர்களை சோதனையிட்டதில் அவர்கள் விக் அணிந்திருந்ததும், தலையின் ஒரு பகுதி மழிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அவர்கள் அணிந்திருந்த விக்குகளின் அடியில் 698 கிராம் எடையில் தங்கப் பசை அடங்கிய இரண்டு பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றிலிருந்து 595 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது.

மற்றொரு வழக்கில் அதே விமானத்தில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த பாலு கணேசன் (42) என்பவரை சோதனையிட்டதில் அவரது உடலில் தங்கப் பசை அடங்கிய 3 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.அவற்றிலிருந்து 622 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக சனிக்கிழமை அன்று விழுப்புரத்தைச் சேர்ந்த அன்பழகன் (24) என்பவரை சோதனையிட்டதில் அவரது காலுறை மற்றும் உள்ளாடையின் உள்ளே 1.5 கிலோ எடையில் தங்கப் பசை அடங்கிய நான்கு பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவற்றிலிருந்து ரூ.62 லட்சம் மதிப்பில் 1.33 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டது. அவரிடம் இருந்து தங்கத்தை பெறுவதற்காக காத்திருந்த சென்னையைச் சேர்ந்த ஏ. தமின் அன்சாரி (26) என்பவர் விமான நிலையத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டார். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மற்றொரு வழக்கில் இண்டிகோ 6ஈ 66 என்ற விமானத்தில் நடைபெற்ற கடுமையான சோதனையில் விமானத்தின் ஓர் இருக்கையின் கீழே குழாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துணி பையில் ரூ. 43.30 லட்சம் மதிப்பில் 933 கிராம் எடையில் வெளிநாட்டு முத்திரையுடன் கூடிய டோலா தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து ஈகே 542 மற்றும் ஜி9471 விமானங்களில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையத் அகமதுல்லா (22), சேலத்தைச் சேர்ந்த சந்தோஷ் செல்வம் (33) மற்றும் சென்னையை சேர்ந்த அப்துல்லா (35) ஆகியோர் விமான நிலையத்தின் வெளி வாயிலில் சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களது சிகை அலங்காரம் சந்தேகப்படும்படி இருந்ததால் அவர்களை சோதனையிட்டதில் தலையின் ஒரு பகுதி மழிக்கப்பட்டிருந்ததும், அவர்கள் விக் அணிந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அணிந்திருந்த விக்குகளின் உள்ளே 2410 கிராம் எடையில் தங்க பசை அடங்கிய 3 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவற்றிலிருந்து ரூ. 96.57 லட்சம் மதிப்பில் 2.08 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு, சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.


மற்றொரு வழக்கில் ஷார்ஜாவிற்கு 6ஈ8415 மற்றும் ஜி 9472 ஆகிய விமானங்கள் மூலம் பயணம் மேற்கொள்ளவிருந்த நான்கு பயணிகள் குடியேற்ற கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு பிறகு பாதுகாப்பு வளாகத்தை நோக்கி செல்கையில் புறப்பாட்டு முனையத்தில் சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களது சிகை அலங்காரத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவர்களிடம் நடைபெற்ற சோதனையில் 4 பயணிகளும் விக் அணிந்திருந்தது தெரியவந்தது. அவர்களது விக்குகளின் உள்ளே 67500 சவுதி ரியால்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.அவர்களது முழுக்கால் சட்டையின் பைகளில் இருந்து 4750 அமெரிக்க டாலர்கள், 6500 திராம்கள், 800000 டாக்காக்கள் கைப்பற்றப்பட்டன.

சுங்கச் சட்டத்தின் அந்நிய செலாவணி மேலாண்மை (பணத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி), விதிகள், 2015-இன் கீழ் ரூ. 24.06 லட்சம் மதிப்பிலான பணம் கைப்பற்றப்பட்டது.மொத்தம் ரூ. 2.53 கோடி மதிப்பில் 5.55 கிலோ தங்கம் மற்றும் ரூ. 24 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...