செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் எந்த ஆபத்தும் இல்லை – தொலை தொடர்புத்துறை விளக்கம்

தமிழகம்

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் எந்த ஆபத்தும் இல்லை – தொலை தொடர்புத்துறை விளக்கம்

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் எந்த ஆபத்தும் இல்லை – தொலை தொடர்புத்துறை விளக்கம்

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிரியக்கம், முற்றிலும் பாதுகாப்பான வரம்புக்குள் உள்ளதால், உடல்நலத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், இதனால் செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு தொலை தொடர்புத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொலை தொடர்பு சேவைகள், நமது பொருளாதாரத்திலும், பேரிடர் சமயத்திலும் முக்கிய பங்காற்றுகின்றன. கொவிட்-19 தொற்று சமயத்தில் அனைத்து துறை பணிகளும், இயல்பாக நடந்ததில், தொலை தொடர்பு சேவைகள் முக்கிய பங்காற்றின.

இவற்றின் காரணமாக, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொலை தொடர்பு சேவைகளின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் தமிழகத்தில் தொலை தொடர்பு கட்டமைப்பை விரைவாக விரிவுபடுத்த வேண்டும். அனைத்து இடங்களில் தொலை தொடர்பு இணைப்புகள் நன்றாக இருப்பதற்கு, செல்போன் கோபுரங்களை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டியுள்ளது.

ஆனால், தவறான எண்ணங்கள் மற்றும் தகவல்களால், குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் அமைக்கும் போதெல்லாம் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிரியக்கத்தின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது. செல்போன் கோபுரங்களில் பயன்படுத்தப்படும் மின்காந்த அலைகள், டி.வி, ரேடியோ சிக்னல்கள் போன்று பாதிப்பு இல்லாத அலைவரிசையாகும். இது குறித்து உலக சுகாதார நிறுவனம் உட்பட பல அறிவியல் அமைப்புகள் ஆய்வு நடத்தியுள்ளன. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிரியக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு கடுமையான விதிமுறைகளை பின்பற்றுகிறது.

சர்வதேச தரத்துடன் ஒப்பிடுகையில் தொலைபேசி கோபுரங்களின் கதிரியக்கம் 10ல் ஒரு பங்கு அளவுக்கே மத்திய அரசு அனுமதிக்கிறது. அதனால் குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றுக்கு அருகில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதால் எந்த பாதிப்பும் இல்லை.

இது தொடர்பான விரிவான தகவல்களை தொலை தொடர்புத்துறை www.dot.gov.in என்ற இணையளத்தில் கொடுத்துள்ளது.செல்போன் கோபுரங்கள் அமைக்கும்முன், அதிலிருந்து வெளியேறும் கதிரியக்கத்தின் அளவு குறித்த விவரங்களை தொலை தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள், தொலை தொடர்புத் துறையிடம் தெரிவிக்க வேண்டும். கதிரியக்கத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்கிறதா என்பதை தொலை தொடர்புத்துறை ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்கிறது. 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படவுள்ளதால், செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கையை அடுத்த 2 ஆண்டுக்குள் அதிகரிக்க வேண்டும்.

இதனால் இதற்கு பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொலை தொடர்புத் துறை, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave your comments here...