வரி விதிப்பின் மீதான அமெரிக்க விசாரணை – இந்தியா விளக்கம்

இந்தியாஉலகம்

வரி விதிப்பின் மீதான அமெரிக்க விசாரணை – இந்தியா விளக்கம்

வரி விதிப்பின் மீதான அமெரிக்க விசாரணை – இந்தியா விளக்கம்

இந்தியாவின் சமப்படுத்தல் வரி உட்பட நாடுகளால் பின்பற்றப்படும் அல்லது பரிசீலிக்கப்படும் டிஜிட்டல் சேவைகள் மீதான வரிவிதிப்பு குறித்து அமெரிக்க வணிக சட்டம், 1974-இன் 301-வது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்தது. இத்தாலி, துருக்கி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட இதர நாடுகளும் விசாரணையின் கீழ் உள்ளன.

இந்தியாவை பொருத்தவரை, மின்-வணிகத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகள் மீது விதிக்கப்படும் 2 சதவீதம் சமப்படுத்தல் வரி மீது விசாரணை நடத்தப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் சமப்படுத்தல் வரியில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனவா, இந்த வரி முன் தேதியிட்டு விதிக்கப்படுகிறதா, இந்தியாவில் வசிக்காதோர் மீது விதிக்கப்படுவதால் அமெரிக்க அல்லது சர்வதேச வரி விதிகளில் இருந்து இது மாறுபட்டதா என்று விசாரணை நடத்தப்படுகிறது.

இது தொடர்பான ஆலோசனைகளை அமெரிக்கா கோரியிருந்த நிலையில், 2020 ஜூலை அன்று தனது கருத்துகளை வழங்கிய இந்தியா, 2020 நவம்பர் 5 அன்று நடைபெற்ற இரு தரப்பு ஆலோசனையில் பங்கேற்று, சமப்படுத்தல் வரி பாரபட்சமானது இல்லையென்றும், இந்தியாவில் இருப்போர், இல்லாதோர், இந்தியாவில் நிரந்தர நிறுவனம் இல்லாதோர் ஆகிய அனைவருக்கும் மின் வணிக நடவடிக்கைகளில் சமமான களத்தை அமைத்துத் தருவதற்கானது என்றும் எடுத்துரைத்தது. இந்தியாவுக்குள் நடைபெறும் டிஜிட்டல் விற்பனைகளுக்கு மட்டுமே இந்த வரி விதிக்கப்படுவதாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்தியாவை சேர்ந்த மின் வணிகர்களுக்கு இந்திய சந்தையில் இருந்து அவர்கள் ஈட்டும் வருமானத்தின் அடிப்படையில் வரிகள் விதிக்கப்படுகின்றன. சமப்படுத்தும் வரிவிதிப்பு இல்லையென்றால், இந்தியாவில் இருந்து செயல்படாத மின் வணிகர்கள், இந்திய சந்தையில் தாங்கள் வழங்கும் பொருட்கள், சேவைகளுக்கு வரி செலுத்தும் தேவை இருக்காது. இரண்டு சதவீத சமப்படுத்தல் வரி என்பது இந்தியாவில் இருந்து நிரந்தரமாக செயல்படாத மின் வணிகர்களுக்கு மட்டுமே ஆகும்.

இதற்கான வரம்பான ரூ 2 கோடி என்பது மிகவும் நியாயமானது மற்றும் உலகெங்கிலும் இருந்து இந்தியாவில் செயல்படும் அனைத்து மின் வணிகர்களுக்கும் பொருந்தும். எந்த அமெரிக்க நிறுவனமும் இதன் மூலம் பாரபட்சமாக நடத்தப்படவில்லை.இது தொடர்பாக அமெரிக்காவின் முடிவை பரிசீலிக்கும் இந்திய அரசு, நாட்டின் நலன் கருதி தேவையான நடவடிக்கையை எடுக்கும்

Leave your comments here...