அயோத்தி வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியது…!!
- October 16, 2019
- jananesan
- : 958
அயோத்தி வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாக பங்கிட்டு பிரித்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட14 மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இதுவரை 39 நாட்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இன்றுடன் விவாதங்களை முடிக்க உத்தரவிட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, ஹிந்து அமைப்புகள் சார்பில், முன்னாள் அட்டர்னி ஜெனரலான, மூத்த வழக்கறிஞர், கே.பராசரன் வாதிட்டார். அப்போது ராமர் கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டியது பாபர் செய்த வரலாற்றுத் தவறு என்று வாதிட்டார். அயோத்தியில் பல்வேறு மசூதிகள் உள்ளன; அங்கு முஸ்லிம்கள் வழிபடலாம். ராமர் பிறந்த இடத்தில் தான் ஹிந்துக்கள் வழிபட முடியும்; அதை மாற்ற முடியாது. அது ராமர் பிறந்த இடம்தான் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு, அவர் வாதிட்டார். இந்த தவறை திருத்த வேண்டிய நேரம் வந்து விட்டதாக இந்துக்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இன்றைய விசாரணையில் இந்துக்கள் தரப்பில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தமது வாதங்களை நிறைவு செய்ய 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே போன்று முஸ்லீம்கள் தரப்பு வழக்கறிஞருக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெறுவதால் இந்த வழக்கிற்கான தீர்ப்பு வரும் நவம்பர் 4 அல்லது 5 ஆம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..