ஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு : தனியார் நிறுவன அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு.!

தமிழகம்

ஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு : தனியார் நிறுவன அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு.!

ஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு : தனியார்  நிறுவன அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு.!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் உள்ள துலுக்கன்குளம் ஊராட்சியைச் சேர்ந்தது தாமரைக்குளம். இந்த ஊருக்கு அருகே உள்ளது பொட்டல்குளம். இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே ஜவுளி பூங்கா அமைப்பதற்காக கடந்த 2016 டிசம்பர் 14 ஆம் தேதி அன்று கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, அந்தப் பகுதியை சேர்ந்த தாமரைக்குளம், காரைக்குளம், எசலிமடை, செட்டிகுளம், கீழ காஞ்சிரங்குளம், மேல காஞ்சிரங்குளம், துலுக்கன்குளம், சி.புதூர் கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், தங்களுடைய விவசாய நிலம் பாதிப்படையும், நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்றும், எனவே இப்பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலர்களின் வாகனங்களை முற்றுகையிட்டனர்.

இந்த நிலையில், 22.6.2019 அன்று அப்பகுதியில் மண் பரிசோதனை மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்க முற்பட்ட போது பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் தடைபட்டது. ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறை திறக்க அனுமதிக்க மாட்டோம். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ளதால், விவசாய பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு சாயப்பட்டறை அமைப்பதால், நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்படும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் பாதிப்பு ஏற்படுவதுடன், வருங்கால சந்ததியினர் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று கூறி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தாமரைக்குளம்- பொட்டல்குளம் இடையே 100 ஏக்கரில் ரூ. 200 கோடி மதிப் பில் ஜவுளிப் பூங்கா தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, தமிழக முதல்வர் எடப்படாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் 25.8.2019 ல் தொடங்கி வைத்தார். காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் அ.சிவஞானம், தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமத்தின் தலைவர் இளங்கோ, திட்ட இயக்குநர் ஞானசம்பந்தம், நிர்வாக இயக்குநர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று அந்த இடத்தில் பணிகள் துவங்குவதற்காக டெண்டர் எடுத்த நிறுவனத்தினர் வந்திருந்தனர். இதனை அடுத்து அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டு வந்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக திருச்சுழி, காரியாபட்டி, விருதுநகரிலிருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பணிகள் துவக்கக்கூடாது என தொடர்ந்து ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். இங்கு பொதுமக்கள் எதிர்ப்பை மீறி எதுவும் செய்ய மாட்டோம் என தனியார் நிறுவனம் உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அந்தப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Leave your comments here...