மகாளய அமாவாசை நாளில் ஶ்ரீதன்வந்த்ரி ஆரோக்கிய பீடத்தில் மோட்ச தீபம்

ஆன்மிகம்

மகாளய அமாவாசை நாளில் ஶ்ரீதன்வந்த்ரி ஆரோக்கிய பீடத்தில் மோட்ச தீபம்

மகாளய அமாவாசை நாளில் ஶ்ரீதன்வந்த்ரி ஆரோக்கிய பீடத்தில் மோட்ச தீபம்

ஆலயங்களில், இறந்தவரின் ஆன்மா இறைவனின் திருவடிகளை அடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. மிகத் தொன்மையான காலத்தில் இருந்தே ஆலயங்களில் மோட்ச தீபம் ஏற்றும் நடைமுறை இருந்து வந்திருக்கிறது. மோட்ச தீபத்தின் அவசியம் குறித்து அகத்தியர் போன்ற மகான்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

அக்காலங்களில் போரில் வீர மரணம் அடைந்த மன்னர்களுக்கும் வீரர்களுக்கும் மோட்ச தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. பொதுவாக மோட்ச தீபம் கோயில் கோபுரத்தின் மீது ஏற்றப்படும். சில நேரங்களில் கோயில் கருவறையிலும் ஏற்றப்படும். இறந்தவர்களுக்காக ஏற்றப்படும் மோட்ச தீபத்தை இறந்தவரின் உறவினர்கள்தான் ஏற்றவேண்டும் என்பதில்லை. எவர் வேண்டுமானாலும் ஏற்றலாம். இதுவே மோட்ச தீபத்தின் தனிச் சிறப்பு.
மோட்ச தீபம் மாலை சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னர் ஏற்றப்பட வேண்டும். அதாவது, மாலை 6 மணிக்கு முன்பு. இருள் சூழும் முன்னரே மோட்ச ஒளி தெரிய வேண்டும். விளக்குகள் (மண் அல்லது உலோகம்), தூய பருத்தித் துணி, வாழை இலை, பச்சைக் கற்பூரம், சீரகம், பருத்திக்கொட்டை, கல் உப்பு, மிளகு, நவ தானியங்கள், கோதுமை, பச்சை நெல், முழு துவரை, முழு பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, முழு வெள்ளை மொச்சை, கருப்பு எள், முழு கொள்ளு, முழு கறுப்பு உளுந்து ஆகிய பொருள்களைக் கொண்டு மோட்ச தீபம் ஏற்றப்பட வேண்டும். பருத்தித் துணியில் மேற்கண்ட பொருள்களை மூட்டையாகக் கட்டி, அதன் முடிச்சை ஒரு திரிபோல் செய்து, விளக்கிலுள்ள எண்ணெயில் போட வேண்டும். பிறகு ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். வாழை இலை விரித்து அதன்மீது நவதானியங்கள் பரப்பி அதன்மீதுதான் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதிகம்.

ஏற்றப்படும் மோட்ச தீபம், மேல்நோக்கி எரிய வேண்டும் என்பதற்காகத்தான் திரி மூட்டையாகக் கட்டப்பட்டு விளக்கின் நடுவில் வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. இந்தத் தீபத் தோற்றம் சிவலிங்கம்போல இருக்கும். விளக்கு ஏற்றியவுடன் பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். ஒருவேளை, பெருமாள் ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம் சொல்லலாம். மோட்ச தீபம் ஏற்றும்போது இறந்து போன நம் உறவினர்கள், நண்பர்கள், முகம் அறியாதவர் களுக்கும்கூட நாம் சங்கல்பம் செய்துகொள்ளலாம்.

முன்னோர்கள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த தினமான மகாளய அமாவாசையன்று மோட்ச தீபம் ஏற்றுவது மிகவும் விசேஷமானது. அதன் மூலம் முன்னோர்களின் ஆசிகள் பரிபூரணமாக நமக்குக் கிடைக்கும்.
இத்தகைய மகத்துவம் கொண்ட மோட்ச தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடு ஶ்ரீதன்வந்த்ரி ஆரோக்கிய பீடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றி ஶ்ரீதன்வந்த்ரி ஆரோக்கிய பீடத்தின் ஸ்தாபகர் ஶ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்ததாவது:

”இன்று நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள்கொரோனா என்னும் கொடிய நோயினால் இறந்துள்ளார்கள். அது மட்டுமின்றி இந்தக் கொரோனாவை முன்னிட்டு பல்வேறு காரணங்களால் பல்லாயிரம் பேர்கள் இறந்துள்ளனர். அவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், அவர் களைப் பிரிந்து வாடும் குடும்பங்கள் சகஜ நிலைக்குத் திரும்பவும், பித்ரு சாபங்கள், பித்ரு தோஷங்கள் அகலவும், மகாளய அமாவாசையை முன்னிட்டு, வாலாஜாபேட்டை, கீழ்புதுப் பேட்டை, அனந்தலை மதுராவில் ஶ்ரீதன்வந்த்ரியுடன் 78 தெய்வங்களின் சந்நிதிகள் மற்றும் சிவலிங்க வடிவில் 468 சித்தர்களுடன் அமைந்திருக்கும் ஶ்ரீதன்வந்த்ரி ஆரோக்கிய பீடத்தில், 17.9.20 அன்று தன்வந்த்ரி சந்நிதியில் படிபூஜை, பல்வேறு ஹோமங்கள், பாயசம் நைவேத்தியம் செய்து, அன்று மாலை 4.30 மணி முதல் 6.15 மணியளவில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.

வேறெங்கும் காண முடியாத இந்த மோட்ச தீபம் ஏற்றப்படும்போது, அவரவர்கள் வீட்டில் இருந்தபடியே பிரார்த்தித்து பித்ருக்களின் ஆசிகளைப் பெறவேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
ஸ்ரீதன்வந்த்ரி ஆரோக்கிய பீடம், கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை,
செல்: 94433 30203

Leave your comments here...