மகளிருக்கு அதிகாரம் அளித்தலுக்கான ஒரு தேசிய இயக்கத்தை உருவாக்க குடியரசுத் துணைத்தலைவர் அழைப்பு

இந்தியா

மகளிருக்கு அதிகாரம் அளித்தலுக்கான ஒரு தேசிய இயக்கத்தை உருவாக்க குடியரசுத் துணைத்தலைவர் அழைப்பு

மகளிருக்கு அதிகாரம் அளித்தலுக்கான ஒரு தேசிய இயக்கத்தை உருவாக்க குடியரசுத் துணைத்தலைவர் அழைப்பு

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு மகளிருக்கு அதிகாரம் அளித்தலுக்கான ஒரு தேசிய இயக்கம் உருவாக்கப்பட வேண்டுமென்று அழைப்பு விடுத்ததோடு எந்த ஒரு பெண் குழந்தையும் பள்ளியில் இருந்து நின்று விடக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

“பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்”, என்ற முன்னோடி திட்டம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சாதகமான விளைவை ஏற்படுத்தி உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய திரு நாயுடு சமூகத்தின் மனப்போக்கை மாற்றுவதற்கு மேலும் அதிக அளவிலான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

“புறக்கணிப்பை நிறுத்துவோம், மகளிருக்கு அதிகாரம் அளிப்போம்”, என்ற தலைப்பிலான தனது முகநூல் பதிவில் திரு நாயுடு இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பெண்கள் உள்ளதை சுட்டிக்காட்டி அரசியல் தளம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் அவர்களுக்கு சமவாய்ப்புகள் அளிக்காத வரை மகளிரின் முன்னேற்றத்தை அடைய முடியாது என்று குறிப்பிட்டார். பாலினப் பாகுபாடு என்பது இனியும் இருக்காது என்பதை நாம் நமது செயல்களிலும் முயற்சிகளிலும் எடுத்துக்காட்ட வேண்டும் – இதுவே நமது குறிக்கோளாகவும் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்குப் போதுமான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் விரைவில் கருத்தொருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்திய திரு நாயுடு பெண்கள் பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு அவர்களுக்கு சமமான சொத்துரிமையை வழங்க வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.

”பிறப்பின் போது இந்தியாவில் பாலின விகித நிலைமை” என்ற அறிக்கையை குடியரசுத் தலைவர் அண்மையில் வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கையில் இந்தியாவில் 2001-2017 காலகட்டத்தில் பிறப்பின் போதான பாலின விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் பொதுவான அல்லது இயல்பான நியதியோடு ஒப்பிடும் போது, குறைந்த எண்ணிக்கையிலேயே பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மக்கள்தொகை மற்றும் வளர்ச்சிக்கான இந்திய நாடாளுமன்றவாதிகளின் கூட்டமைப்பு (IAPPD) வெளியிட்டிருந்தது.

அறிக்கையை சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் அனைத்துப் பங்குதாரர்களும் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு எதிர்கொள்ள வேண்டிய ஒரு எச்சரிக்கை ஊட்டும் பிரச்சினையாக இது உள்ளது என்று குறிப்பிட்டார். ஒட்டுமொத்த சமுதாயம் முதல் நாடாளுமன்றவாதிகள் வரை, அரசாங்கம், கொள்கை வகுப்பவர்கள், கருத்துருவாக்கத் தலைவர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளித்தலுக்காக பணியாற்றி வரும் பல்வேறு நிறுவனங்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

முரண்பட்ட இந்த பாலின விகிதம் வெளிப்படுத்தும் எச்சரிக்கையை தங்களது சம்பந்தப்பட்ட தொகுதியில் உள்ள மக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை அனைத்து நிலையிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு வலியுறுத்திய திரு நாயுடு வரதட்சிணை மற்றும் ஆண் குழந்தைக்கு முன்னுரிமை அளிக்கும் மனப்போக்கு போன்ற சமூகத் தீமைகளை முழுமையாக ஒழிப்பதற்கு ஒவ்வொரு குடிமக்களும் ஒரு போர்வீரர் போன்று செயலாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

பாலின விகிதத்தில் சமநிலையைக் கொண்டு வருவதற்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை தடை செய்யும் சட்டத்தை (PC & PNDT) தீவிரமாக அமல்படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்திய குடியரசுத் துணைத்தலைவர் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான எந்தவொரு வகையான வன்முறை மற்றும் பாகுபாடுகளை சகித்துக் கொள்ளக் கூடாது என வலியுறுத்தினார்.

புதிய இந்தியாவை கட்டமைக்கும் வழிமுறையில் தடைக்கற்களாக இருக்கின்ற வறுமை, கல்லாமை மற்றும் இதர சமூகத் தடைகளை நீக்குவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டுமென அழைப்பு விடுத்த திரு நாயுடு எந்தவொரு பாகுபாடும் இல்லாத வளமையான மற்றும் மகிழ்ச்சியான இந்தியாவை கட்டமைக்கும் யாகத்தில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் குறிப்பாக ஒவ்வொரு இளைஞரும் இணைய வேண்டுமென்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

Leave your comments here...