348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்..
- October 1, 2019
- jananesan
- : 797
தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக சென்னையில் கழிவுநீரைச் சுத்திகரித்து வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்படி கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 348 கோடி ரூபாய் மதிப்பாட்டில் அமைக்கப்பட்டு வந்த கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கான பணிகள் நிறைவடைந்தன. இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, தலைமை செயலாளர், நகராட்சி செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து தினமும் 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து வழங்கப்படும். சுத்திகரிப்பட்ட நீரானது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட உள்ளது.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் திட்டங்களால் ஒரு நாளைக்கு 110 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்படும் என்றார். சுத்திகரிக்கப்பட்ட நீர் 9 நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சென்னை மக்களுக்கு 876 மில்லியன் லிட்டர் தண்ணீர் எவ்வித பிரச்சனையும் இன்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். நதிநீர் விவகாரங்களில் அண்டை மாநிலங்களுடன் சுமூகமான உறவை தமிழக அரசு பேணி வருவதாகவும், தமிழக அரசின் முயற்சியால் ஆந்திர அரசு கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்துள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.மேலும் தமிழகம் வரும் கிருஷ்ணா நதி நீர் வீணாகாமல் தடுக்க, கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.