பெங்களூர் கலவரம் : பொதுச்சொத்துக்கள் சேதாரம் – உத்தரபிரதேச யோகி அரசின் ஃபார்முலாவை எடுக்கும் கர்நாடக அரசு.!

இந்தியா

பெங்களூர் கலவரம் : பொதுச்சொத்துக்கள் சேதாரம் – உத்தரபிரதேச யோகி அரசின் ஃபார்முலாவை எடுக்கும் கர்நாடக அரசு.!

பெங்களூர் கலவரம் : பொதுச்சொத்துக்கள் சேதாரம் – உத்தரபிரதேச யோகி அரசின் ஃபார்முலாவை எடுக்கும் கர்நாடக அரசு.!

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினர் இஸ்லாமிய மதகுருவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவரது வீடு சூறையாடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தி. இவரது உறவினர் நவீன என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இஸ்லாம் குறித்த அவதூறு கருத்து ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது திடீரென எம்.எல்.ஏ. வீடு மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டிருக்கின்றன. சாலையில் இருந்த வாகனங்களும் தீக்கரையாக்கப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டது.இதனிடையே சர்ச்சை கருத்தை பதிவிட்ட நவீன கைது செய்யப்பட்ட தகவலை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் டிஜே ஹள்ளி, கேஜி ஹள்ளி காவல் நிலையங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது.

இதில் 60க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். கேஜி ஹள்ளி, டிஜி ஹள்ளி காவல்நிலையப் பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 4,000 பேர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் கல்வீசியும், அடித்து நொறுக்கியும் ஏராளமான பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளனர். இவர்களைக் கலைக்கும் முயற்சியாக தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகள் வீசுதல், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றைக் காவல்துறையினர் கையில் எடுத்தனர். இதில் மூவர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவர பூமியாக சுமார் 6 மணி நேரம் பெங்களூரு பதற்றத்தில் இருந்துள்ளது. இதுபற்றி பெங்களூரு காவல்துறை ஆணையர் கமால் பந்த் கூறுகையில், கலவரம் நடந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய பேஸ்புக் போஸ்ட் போட்ட எம்.எல்.ஏவின் உறவினர் நவீனும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் மூலம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கே.ஜி ஹள்ளி, டிஜே ஹள்ளி பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. RAF, CRPF, CISF கம்பெனி படையினரைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட வரவழைத்துள்ளதாக தெரிவித்தார்.இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. வதந்திகள் பரப்புவதை பார்த்துக் கொண்டு அரசு அமைதியாக இருக்காது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில் இந்த வன்முறை திட்டமிடப்பட்டது என்றும், உத்தர பிரதேசத்தில் செய்தது போல குற்றவாளிகளிடமிருந்து சேதமடைந்த சொத்துகளுக்கான செலவுகளை அரசு மீட்டெடுக்கும் என கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். கலவரம் நடந்த பகுதிகளில் வரும் 15 ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது.

Leave your comments here...