TNPSC குரூப் 2, 2-ஏ பதவிகளில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு..!

Scroll Down To Discover
Spread the love

டி.என்.பி.எஸ்.சி. வினாக்கள் சமீபத்தில் தவறாகவும், அச்சுப்பிழையாகவும், மொழி பெயர்ப்பு பிழையாகவும் கேட்கப்படுவது குறித்து, சென்னையில் நேற்று நடைபெற்ற குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வை பார்வையிட வந்த டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ‘டி.என்.பி.எஸ்.சி., கேள்வித்தாள்கள் பல கட்டங்களாக தயாரிக்கப்படுகிறது. ரகசியம் கருதி, ஒரே கட்டமாக தயாரிக்கப்படுவதில்லை. வினாத்தாள்களின் மொழிப்பெயர்ப்பு, வினாக்கள் பாடத்திட்டத்தில் உள்ளதா? என்பது குறித்து நிபுணர்குழு ஆய்வு செய்கிறது. சில நேரங்களில் அச்சுப்பிழை, சில இடங்களில் மொழிப்பெயர்ப்பு பிழை வந்து கொண்டுதான் இருக்கிறது.

இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. முடிந்தவரை அந்த தவறுகள் எல்லாம் இல்லாமல், கேள்வித்தாள்கள் தயாரிக்க, நிபுணர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தவறான கேள்விகளை வடிவமைக்கும் நிபுணர்களை அந்த பணியில் இருந்து மாற்றியுள்ளோம்.

ஆனாலும், சில நேரங்களில் பிழைகள் தவிர்க்க முடியாததாகிறது. தவறான கேள்விகள் வந்தால், மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிபுணர்கள் குழு ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்’ என்றார்.

மேலும் அவர், ‘ஓ.எம்ஆர். கொண்டு முறைகேடு என்பது, பல ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட செய்தி. இப்போது, ஓ.எம்.ஆர். தாளில், பல முன்னேற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். ஓ.எம்.ஆர். தாளில் பாதுகாப்பு முறைகள் உள்ளன. குரூப் 2, 2-ஏ பதவிகளில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றும் கூறினார்