தமிழக பேரூராட்சிகளில் தீபாவளி வசூல் வேட்டை! அள்ளி செல்லுமா லஞ்ச ஒழிப்புத்துறை..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகப்  பேரூராட்சிகளில்  கடந்த  10  வருடங்களாக  தீபாவளி  காலங்களில் பேரூராட்சி உதவி இயக்குநர்கள் சிலர் அமைச்சர் அலுவலகத்திற்கு கோல்ட் காயின்கள், மற்றும் பணம் கொடுக்க வேண்டும் என வசூல் செய்வது வழக்கம் ஆனால் அமைச்சர் அலுவலகத்தில் இப்படி எந்த பணமும் கேட்பது கிடையாது.

இந்த அதிகாரிகள் செயல் அலுவலர்களை மிரட்டி பணத்தை வாங்கி கொண்டு ‘நமக்கு நாமே திட்டம்’ போல தனக்குத்தானே சுருட்டி கொள்கிறார்கள். இதில் உதவி இயக்குநர்களான, மாகிம், விஜயலட்சுமி, கணேசராம், துவாரகநாத்சிங் போன்றவர்கள் கை தேர்ந்தவர்கள்.

அதிலும் குறிப்பாக குமரி மாவட்ட ஏடி விஜயலட்சுமியோ ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறார். இவர் தேனியில் ஏடியாக பணியாற்றிய போது பேரூராட்சிகளில் தெருவிளக்கு கொள்முதலில் ஒன்றரை கோடிக்கு மேல் ஊழல் செய்து சிக்கியவர். இவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்த போதும் முன்னாள் பேரூராட்சி இயக்குநர் செல்வராஜ்யிடம்  பல லட்சங்களை கொடுத்து குமரி மாவட்ட ஏடியாக பணியில் சேர்ந்து செமத்தையாக சுருட்டிக் கொண்டிருக்கிறார்.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட உதவி செயற்பொறியாளர் ஜெயகிருஷ்ணன் வாங்கும் லஞ்ச பணத்தை தனது சொந்த ஊரான மதுரையில் மனைவி மூலமாக கந்து வட்டிக்கு விடுகிறாராம், திருவண்ணாமலை ,வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மவட்டங்களில் ஏடியாக இருக்கும் கணேசன் தீபாவளிக்கு என்று நான்கு கிராம் அளவில் கோல்டு காயின்ஸ் வாங்கி தர வேண்டும் என இ.ஓ க்களிடம் கூறியுள்ளதாக ஏடி அலுவலகத்தில் உள்ள ஒருவர் கூறும் தகவலாகும். திருநெல்வேலி, தென்காசி , தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் உதவி இயக்குநர் வில்லியம் ஏசுதாஸ் ஏடியாக வந்த நான்கு மாதத்திலேயே நெல்லை டவுணில் வீடு வாங்கி விட்டார் என்றால் மற்ற வசூலை பற்றி சொல்லவா வேண்டும்…. இரண்டு சிறப்பு நிலை. இ.ஓ.க்கள் மூலமாக மாதாந்திர வசூல் வேட்டை நடத்துகிறார் என கூறப்படுகிறது.

உதவி இயக்குநர் விஜயலட்சுமி

உதவி இயக்குநர் விஜயலட்சுமி

குமரி மாவட்ட பேரூராட்சிகளில் சில செயல் அலுவலர்களுக்கு யாரைப் பற்றியும் பயம் கிடையாது. காரணம் மாவட்ட உதவி இயக்குநர் விஜயலட்சுமியோ கொடுப்பதை வாங்கிக் கொண்டு கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு. செயல் அலுவலர்களின் ஊழல்களுக்கு பச்சை கொடி காட்டுகிறார். உதாரணத்திற்கு கல்லுகூட்டம் பேரூராட்சியில் செயல் அலுவலராக இருக்கும் மாலதி வேலைக்கு ஒழுங்கா வருவது கிடையாதாம் மதியத்திற்கு மேல் திருமண வீட்டுக்கு வருவது போல் வந்து தலையை காட்டிக் கொண்டு செல்வாராம். ஆனால் காண்ட்ராக்டர்களிடம் கமிஷன் காசை மட்டும் சரியாக ஆட்களை வைத்து வாங்கி செல்கிறாராம். இவர் மீது இரண்டு சார்ஜஸ் உள்ளதால் பதவி உயர்வு வராது. அதனால் இருக்கும் வரை கிடைப்பதை சுருட்ட வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம். கட்டிட அனுமதிக்கு வரும் கோப்புகளை வேண்டுமென்றே பல மாதங்களாக கிடப்பில் போட்டுக்கொண்டு அவர் கேட்கும் தொகை வந்த பிறகுதான் கையெழுத்து போடுவாராம். ஏதேனும் அடிப்படைத் தேவைகளுக்காக மனு கொடுக்க செல்லும் மக்களை மதிப்பது கூட கிடையாது அவர்களின் கோரிக்கையும் நிறைவேற்றுவது கிடையாது.

அதுபோல் களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி தனக்கு விரைவில் பதவி உயர்வு வந்துவிடும் அதனால் தான் இங்கு இருக்கும் வரை கிடைப்பதை சுருட்ட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். களியக்காவிளை பேரூராட்சியில் ருசி கண்ட பூனையாக இருக்கும் ரமாதேவிக்கு தனக்குப் பதவி உயர்வு  வேண்டாம்  நான் இங்கேதான் பணியாற்ற விரும்புகிறேன் என தனக்கு நெருங்கிய செயல் அலுவலரிடம் சொல்லி புலம்புகிறாராம். ஆனால் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் இன்னும் பத்து மாதம் தான் பதவி காலம் உள்ளது அதற்குள் பேரூராட்சியை திவாலக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளோடு இரவு பகலாக உழைக்கிறார. இந்த செயல் அலுவலர் பணம் வாங்காமல் எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடுவது கிடையாது. இது போதாது என்று காண்ட்ராக்டர்களிடம் 8% கமிஷன் தனியாக வாங்குகிறாராம். குமரி மாவட்டத்தில் செயல் அலுவலர்கள் தான் இப்படி என்றால் இங்கிருக்கும் உதவி செயற்பொறியாளர் ஒருவர் காண்ட்ராக்டர்கள் எப்படி போனால் தனக்கென்ன அவர்களுக்கு லாபமோ நஷ்டமோ தான் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும் என கறாராக கூறுகிறாராம். ஆனால் வெளியில் தன்னை போன்ற நேர்மையானவர் யாரும் இல்லை என்றும் தன்னைப் போன்ற மாரியான முத்தானவர் தமிழக பேரூராட்சியிலேயே கிடையாது எனவும் மார்தட்டிக் கொள்வாராம். ஆனால் இவர் கமிஷன் பேசும் ஆடியோவை கேட்டால் இவரா பேரூராட்சியின் முத்து என்ற எண்ணம் தோன்றுகிறது. இங்கிருக்கும் இளநிலை பொறியாளர்களான பாபு, மோகன் குமார் தங்களை ஒரு கண்காணிப்பு பொறியாளர் போல் கருதுகிறார்கள். யாரை கண்டும் பயம் கிடையாது. யார் எப்படி போனால் நமக்கென்ன, தங்களின் ஒரே தாரக மந்திரம் ‘பணம்’ என்று வேலையே செய்யாமல் பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளில் ஆய்வுக்கே போவது கிடையாதாம் ஜெ.இ க்களிடம் வேலை செய்ய கூறி காண்ராக்டர்கள் மூலமாக வரும் கமிஷனை வாங்கி விடுவாராம். இதே போல் தான் இம்மாவட்ட உதவி இயக்குநரான லதாவும் இதே கமிஷன் ஏஜென்டாக தான் உள்ளாராம்.

உதவி இயக்குநர் துவாரகநாத்சிங்

உதவி இயக்குநர் துவாரகநாத்சிங்

கோவை மாவட்ட பேரூராட்சி ஏடியாக இருக்கும் துவாரகநாத்சிங் கடந்த ஆட்சியில் வேலுமணியின் பிணாமியாக இருந்தவர். திமுக ஆட்சி வந்த உடன் இந்த ஊழல் வாதியான துவாரக நாத்சிங்கின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்த போது பல கோடிக்கான ஆவணங்களை அள்ளி சென்றனர். இந்த ஊழல்வாதி மீது நகர்புற அமைச்சர் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

பேரூராட்சி உதவி இயக்குநர் மாகின் அபூபக்கர்

பேரூராட்சி உதவி இயக்குநர் மாகின் அபூபக்கர்

தமிழக பேரூராட்சிகளில் தெரு விளக்கு பராமரிப்பு பிளம்பிங், குடிநீர் மெயின்டன்ஸ் குப்பை எடுப்பது சுகாதார பொருட்கள் வாங்கியது என்ற பெயரில் பல கோடிகளை கடந்த  ஆட்சியில்  கொள்ளை  அடித்த  ஏடிக்களான துவாரகநாத் சிங்,  கணேஷ்ராம், விஜயலட்சுமி,  மாகீம்,  தர்மபுரி மண்டல இ.இ கணேசமூர்த்தி, லலிதாமணி ஏ.இ.இ, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் ஏ.இ.இ ஜெயகிருஷ்ணன் இன்னும் சில ஏ.இஇ க்களின் வீடுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு செய்தால் பல நூறு கோடிகளுக்கான ஊழல் பணத்தை கைப்பற்றலாம் என சக இன்ஜினியர்களே கூறுகிறார்கள்.

பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம்

பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம்

இந்த ஊழல் வாதிகள் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைச்சர்களின் வீட்டுக்கும் இயக்குநர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என போலி பில் போட்டு காண்ராக்டர்களிடம் கோல்டு காயின்ஸ் வாங்கிதர கேட்கிறார்காளம். ஓய்வு பெற்ற முன்னாள் ஏடி கண்ணன் இதுபோல் தீபாவளிக்கு வசூல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதற்கும் விஜிலென்ஸ் நம்பரை சொல்லுவோம்:- 044-22310989,
வாட்சப்எண்:- 9498180936,

ஊழலில் இருந்து பேரூராட்சியை மீட்க நினைக்கும் சமூக ஆர்வலர்களுக்காவது பயன்படட்டும்.