வெப்ப அலை வீசி வரும் நிலையில், அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை அதிகரித்து வருகிறது. இது சவால் மிகுந்ததாக இருக்கிறது. இந்த வெப்பம் நம் அனைவருக்கும் கடுமையானது. எனவே, முடிந்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அதிக அளவில் தண்ணீர் குடியுங்கள். வெளியே செல்லும்போது உங்களுடன் தண்ணீரை கொண்டு செல்லுங்கள். மற்றவர்களுக்கும் தண்ணீர் கொடுங்கள். இந்த வெப்ப காலத்தில், இத்தகைய கருணை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
https://x.com/narendramodi/status/2059507227510399462?s=20
தலைச்சுற்றல், குமட்டல், அதீத சோர்வு போன்ற வெப்பத்தினால் ஏற்படும் அறிகுறிகளை கவனியுங்கள். உங்களைச் சுற்றியுள்ள ஒருவர் வழக்கத்துக்கு மாறாக உடல்நலக்குறைவாகவோ, பலவீனமாகவோ உணர்ந்தால், தலைவலி ஏற்பட்டால் அவர்களை குளிர்ச்சியான அல்லது நிழலான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்கு தண்ணீர் அல்லது ஓஆர்எஸ் கரைசல் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள் இந்த அதீத வெப்பத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆபத்தானதாக மாறக்கூடும், heatstroke ஏற்படவும் வழிவகுக்கும். சரியான நேரத்தில் வழங்கப்படும் கவனிப்பு பெரிதும் உதவும்.
இந்த வெப்ப அலை காலத்தில் முடிந்தபோதெல்லாம் வயதான பெற்றோர்கள், தாத்தா, பாட்டி உள்ளிட்ட அன்புக்குரியவர்களை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரியுங்கள். அவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும், நண்பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், முடிந்தபோதெல்லாம் ஓய்வெடுக்கவும் நினைவூட்டுங்கள்.
இந்த தருணத்தில் நம்மைச் சுற்றியுள்ள பறவைகளையும் விலங்குகளையும் நாம் நினைவில் கொள்வோம். உங்கள் வீடு, பால்கனிகள், மொட்டை மாடிகள், கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு வேளியே ஒரு சிறிய பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீர் தாகமாக இருக்கும் பறவைக்கு உயிர்காக்கும் மருந்தாக அமையலாம். இந்த கடினமான நாட்களில் கருணை நம்மை வழிநடத்தட்டும்” என தெரிவித்துள்ளார்.
வெப்ப அலை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சத்தீஸ்கரின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலவியுள்ளது. கிழக்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் கடும் வெப்ப அலை நிலவுகிறது. உத்தராகண்ட், ஹரியானா, ராஜஸ்தான், பிஹார், ஒடிசா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகள் ஆகியவற்றிலும் வெப்ப அலை நிலவுகிறது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி பகுதிகளில் மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கடும் வெப்ப அலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...