இந்துக்கள் இஸ்லாமியரிடையே மோதலை உருவாக்க சதி – கருப்பர் கூட்ட யூடியூப் சேனலை தடை செய்க – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்…!
- July 18, 2020
- jananesan
- : 2563
- VMSMustafa
இந்துக்கள் இஸ்லாமியரிடையே மோதலை உருவாக்க சதி நடப்பதாகவும் கருப்பர் கூட்ட யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு இந்து அமைப்புகள் கறுப்பர் கூட்டத்துக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்தன.
இதை தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப் பிரிவு போலீசாரிடம் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு எதிராக புகார் அளித்தனர். இதனால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அந்த யூ டியூப் சேனலைச் சேர்ந்தவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் தாமாக முன்வந்து புதுச்சேரியில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் அலுவலகத்துக்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பாக மனதார வரவேற்கிறேன்.
தமிழ்க் கடவுள் முருகனை வழிபடுவோரின் இறைநம்பிக்கையை அவமதிக்கும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டிருப்பது திட்டமிடப்பட்ட மதகலவரத்தை தூண்டும் செயலாகும். இது போன்ற செயல்கள் தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தைச் சிதைத்து. அதன் மூலம் இந்துக்கள் இஸ்லாமியர்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலரால் திட்டமிட்டு சதிகள் அரங்கேற்றப்படுகின்றன.தற்போது கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரவர் மதமுறைபடி அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்து மதத்தினரின் உடல்களை இஸ்லாமியர்கள் அடக்க செய்ய உதவி வருகின்றனர். தற்போது இந்து மற்றும் இஸ்லாமிய சகோதரர்களிடையே நல்லிணக்கம் நிலவி வருகிறது.
இதனை சீர்குலைக்கும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை நடத்துவது இஸ்லாமியர்கள் என்ற முறையில் சிலரால் அவதூறுகள் சமூகவலைதளங்களில் பரபரப்பட்டது. இதன் மூலம் இஸ்லாமியர்களின் மீது இந்து சகோதரர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தும் சதி செயலில் சில கும்பல் ஈடுபட்டு வருகிறது. அமைதி பூங்காவான தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் இது போன்ற விஷசெடிகளை உடனை அகற்ற வேண்டும், கறுப்பர் யூடியூப் சேனலை தடை செய்யவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
Leave your comments here...