ராணுவ வீரரின் வீட்டில் இரட்டைக்கொலை : சிவகங்கை அருகே கொள்ளையர்களின் வெறிச்செயல் : நகை கொள்ளை..!

சமூக நலன்தமிழகம்

ராணுவ வீரரின் வீட்டில் இரட்டைக்கொலை : சிவகங்கை அருகே கொள்ளையர்களின் வெறிச்செயல் : நகை கொள்ளை..!

ராணுவ வீரரின் வீட்டில்  இரட்டைக்கொலை :  சிவகங்கை அருகே கொள்ளையர்களின் வெறிச்செயல் : நகை கொள்ளை..!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்துள்ள முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தியாகு – ராஜகுமாரி தம்பதியினர். சந்தியாகு ரானுவ வீரர் ஆக இருந்து ஓய்வுபெற்றவர். தற்போது இவர்களின் 2 மகன்களும் ராணுவ வீரர்களாக எல்லையில் பணியாற்றி வருகின்றனர். மூத்த மகன் ஸ்டீபன் ராஜ் லடாக் பகுதியிலும் 2வது மகன் ஜேம்ஸ் ராஜ் காஷ்மீர் பகுதியிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் மூத்த மகன் ஸ்டீபனின் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் இருக்கிறார். கடந்த ஓராண்டாக அவர் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய மனைவி சினேகா (30). இவர்களுக்கு சோயல்லா என்ற 7 மாத பெண் குழந்தையும் ஸ்டீபனின் தாய் தந்தையருடன் கூட்டு குடும்பமாக கிராமத்தில் உள்ள வீட்டிலேயே வசித்து வருகிறார்.

சினேகாவின் பெற்றோர் வீடு சென்னை எம்.கே.வி. நகரில் உள்ளது. கணவர் ராணுவத்தில் இருப்பதால் சினேகா குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் தனது தாயார் மற்றும் குழந்தையுடன், அவரது பூர்வீக ஊரான இளையான்குடி அருகே கோட்டையூர் கிராமத்துக்கு வந்து ஒரு மாதமாக அங்கு தங்கினார்.இந்நிலையில் சினேகா தனது மாமியாருடன் வசிக்க முடுக்கூரணி கிராமத்துக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைக்குழந்தையுடன் வந்தார். நேற்று முன்தினம் இரவு சினேகா, அவருடைய குழந்தை மற்றும் மாமியார் ராஜகுமாரி ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஸ்டீபன் ராஜின் தந்தை சந்தியாகு தோட்டக் காவல் பணிக்குச் சென்றுள்ளார். இதனால் வீட்டில் மாமியார் ராஜகுமாரியும் மருமகள் சினேகா மற்றும் 7 மாத குழந்தை மட்டும் தனியாக இருந்துள்ளனர். அப்போது நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததுடன் வீட்டில் இருந்த 65 சவரன் நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு வீட்டிற்குள் சென்று பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததனர். மேலும் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தடயங்களை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி மயில்வாகனன், மற்றும் மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் (பொறுப்பு) வருண்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டுள்ளனர். கொலையான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அதிகாலை நேரத்தில் மாமியார், மருமகள் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மூத்த மகன் ஸ்டீபன் ராஜ் லடாக் பகுதியில் இருப்பதால் அவருக்கு, இச்சமபவம் குறித்து தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்து வருவதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...