மாநில அரசுகளுக்கு இலவசமாக 2 கோடிக்கும் அதிகமான N-95 முகக்கவசங்கள் மற்றும் 1 கோடிக்கும் அதிகமான PPE-kits வழங்கி உள்ளது – மத்திய அரசு
- July 4, 2020
- jananesan
- : 965
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு இலவசமாக 2 கோடிக்கும் அதிகமான என்95 முகக்கவசங்கள் மற்றும் ஒரு கோடிக்கும் அதிகமான பிபிஇ-க்களை வழங்கி உள்ளது
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களோடு இணைந்து மத்திய அரசு கோவிட்-19 தொற்றைத் தடுக்க, கட்டுப்படுத்த மற்றும் நிர்வகிக்க தொடர்ச்சியாக பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மத்திய அரசாங்கத்தின் முக்கிய பங்கு என்பது பெருந்தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்திற்குத் தேவையான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதாக இருக்கிறது.
மத்திய அரசானது கோவிட்-19க்கு எதிரான போராட்டத்திற்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதோடு மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளின் முயற்சிகளுக்கு துணையாக இருக்கும் வகையில் இலவசமாக மருத்துவ உபகரணங்களை அவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்திய அரசு, ஆரம்ப நிலையில் வழங்கிய இத்தகைய மருத்துவப் பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை அல்ல. பெருந்தொற்று பரவல் காரணமாக மருத்துவப் பொருட்களுக்கு சர்வதேச அளவில் தேவை இருந்ததால் வெளிநாட்டுச் சந்தையில் கிடைப்பதும் அரிதாக இருந்தது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மத்திய ஜவுளி அமைச்சகம், மத்திய மருந்துப் பொருட்கள் அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கழகம் மற்றும் இதர நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியின் காரணமாக இந்தப் பெருந்தொற்று பரவல் காலகட்டத்தில் தனிநபர் பாதுகாப்பு உபகரணம் (பிபிஇ), என்95 முகக்கவசம், வென்ட்டிலேட்டர் முதலான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரித்து விநியோகிக்க ஊக்கம் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக சுயசார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் ஆகிய திட்டங்கள் வலுப்படுத்தப்பட்டன. தற்போது இந்திய அரசு விநியோகித்த பெரும்பாலான பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாகவே இருக்கின்றன.
மத்திய அரசு 2020 ஏப்ரல் 1 முதல் 2.02 கோடிக்கும் அதிகமான என்95 முகக்கவசங்களையும் 1.18 கோடிக்கும் அதிகமான பிபிஇ உபகரணங்களையும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மத்திய நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. இதுமட்டுமல்லாமல் 6.12 கோடிக்கும் அதிகமாக ஹெச்.சி.கியூ மாத்திரைகளும் வழங்கப்பட்டு உள்ளன.
இதனோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்ட்டிலேட்டர்கள் இதுவரை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மத்திய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இதில் 6,154 வென்ட்டிலேட்டர்கள் ஏற்கனவே பல்வேறு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளன. இந்த வென்ட்டிலேட்டர்களை நிறுவுதல் / நிர்மாணித்தல் பணியை இந்திய அரசு உறுதி செய்கிறது. கோவிட் ஐ.சி.யூ வார்டுகளில் வென்ட்டிலேட்டர் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் இடைவெளியை நிரப்புவதற்கு இது உதவியாக இருக்கும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 1.02 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வருகிறது. இதில் 72,293 சிலிண்டர்கள் ஆக்சிஜன் படுக்கைகளுக்காக விநியோகிக்கப்பட்டு உள்ளன.
தில்லியில் 7.81 லட்சம் பிபிஇ-க்கள் மற்றும் 12.76 லட்சம் என்95 முகக்கவசங்கள், மகாராஷ்டிராவில் 11.78 லட்சம் பிபிஇ-க்கள் மற்றும் 20.64 லட்சம் என்95 முகக்கவசங்கள், தமிழ்நாட்டில் 5.39 லட்சம் பிபிஇ-க்கள் மற்றும் 9.81 லட்சம் என்95 முகக்கவசங்கள் இதுவரை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் வழங்கப்பட்டு உள்ளன.
Leave your comments here...