இதிலுமா கொள்ளை ? போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த அரசு ஊழியர்கள் உள்பட 5 பேர் சென்னையில் கைது..!
- June 25, 2020
- jananesan
- : 981
- EPass
கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட முழு முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளி மாநிலத்தில் சிக்கியுள்ளவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளார்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கு அமல்படுத்திய பின்னர் பொதுமக்கள் வெளியில் வரத் தடைவிதித்து மாநில அரசு உத்தரவிட்டது. கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதனை தொடர்ந்து இறுதி சடங்கு, திருமணம், மருத்துவ சிகிச்சை பெறுவோர் வெளி மாவட்டங்களுக்கு செல்ல சில வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. வெளிமாவட்டங்களுக்கு செல்வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அவசர பாஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பம் செய்து பாஸ் பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் முறையாக விண்ணப்பித்தவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை என்றும், இடைத் தரகர்களிடம் பணம் கொடுத்தால் இ-பாஸ் பெற முடிவதாக சென்னை காவல்துறைக்கு புகார் வந்தது. இதுதொடர்பாக ‘சைபர் க்ரைம்’ இன்ஸ்பெக்டர் துரை, ‘தொற்று நோய் தடுப்பு’ சட்டப்பிரிவு 269 மற்றும் ‘பேரிடர் மேலாண்மை’ சட்டப்பிரிவு உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். போலி இ-பாஸ் தயாரிப்பு வழக்கில் சென்னை பேசின்பிரிட்ஜ் வருவாய் ஆய்வாளர் குமரன், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் கோபி (35), மனோஜ்(30), வினோத்(37) ஆகிய 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Leave your comments here...