எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரர் ; தெலுங்கானா முதல்வர் ரூ.5 கோடி , ம.பி முதல்வர் ரூ.1 கோடி நிதி அறிவித்த முதல்வர்கள்..!
- June 20, 2020
- jananesan
- : 1221
- China-border
இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், ( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் வீரமரணமடைந்த 20 பேரின் குடும்பங்களுக்கும் மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை அறிவித்துள்ளன. தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதேபோல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சார்பில் அம்மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‛லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதி வழங்கப்படும். அவரது குடும்பத்திற்கு ஒரு வீடு, அவரது மனைவிக்கு குரூப்-1 அரசுப் பணி அளிக்கப்படும்,’ என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையில் வீரமரணமடைந்த மற்ற 19 வீரர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான ராணுவ வீரர் தீபக் சிங்கும் வீரமரணம் அடைந்த வீரர்களில் ஒருவர். தற்போது அவரது இழப்பு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தீபக் சிங்கின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் வீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Leave your comments here...