போலி கபசுர குடிநீர் விற்பனை அதிகரிப்பு : குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அரசு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

தமிழகம்

போலி கபசுர குடிநீர் விற்பனை அதிகரிப்பு : குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அரசு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

போலி கபசுர குடிநீர் விற்பனை அதிகரிப்பு : குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அரசு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

போலியாக கபசுர குடிநீரை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டுமென தமிழக அரசிற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் நாளுக்குநாள் உயிரழப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பு மருந்து இல்லாததால் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் கபசுர குடிநீர் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சித்தா மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் கபசுரக் குடிநீரை அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து தன்னார்வலர்கள், நிறுவனங்கள், பாரம்பரிய மருத்துவர்கள் ஆங்காங்கே கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் நாட்டு மருந்து கடைகளுக்கு அலைந்து வருகின்றனர். இதை பயன்படுத்தி சிலர் போலி கபசுர குடிநீர் சூராணத்தை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.அதுமட்டுமின்றி சிலர் கபசுர குடிநீர் சூராணத்தை சிலர் முறையான அனுமதி பெறாமல் அதிக லாபத்திற்காக மருந்து கடைகளிலும் இந்த போலி கபசுர குடிநீரை விற்பனை செய்து வருகின்றனர்.

நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு அந்த பொருட்களை மிக்ஸில் அரைத்து பாக்கெட் வடிவில் 50 கிராம் ரூ.100 வரை விற்பனை செய்கின்றனர்.மருந்து கடைகளுக்கு ரூ.60 க்கு அளிப்பதால், அவர்களும் இது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர் என்பதை எல்லாம் பார்க்காமல் லாப நோக்கில் பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனர். பவுடர் வடிவில் தயாரிக்கப்படும் இந்த கபசுர குடிநீர் சூராணம் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்களில் அடைத்து விற்பனை செய்து, அரசின் தடை உத்தரவையும் மீறி வருகின்றனர்.

கொரோனாவில் இருந்து எப்படியாவது பாதுகாத்து கொள்ள முடியாதா என மக்கள் அனைவரும் ஏங்கி, கபசுர குடிநீரை குடித்தால் பாதுகாத்து கொள்ள முடியும் எனும் அரசின் நம்பிக்கையின் அடிப்படையில் மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் போலிகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக பதிலாக எதிர்மறையை உருவாக்கும் என மக்களிடம் அறியாத நிலை உள்ளது.

ஆகவே மக்களின் நலன் மீது அக்கறையில்லாமல் கொரோனா எனும் கொடிய அரக்கனுடன் கூட்டணி வைத்து கொண்டு போலி கபசுர குடிநீர் தயாரிக்கும் நபர்களை அரசு கண்டறிந்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமில்லாது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்படும் கபசுரகுடிநீர் சூராணத்தை தவிர்த்து அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் தயாரிக்கும் கபசுரகுடிநீர் சூராணத்தை மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் தனி குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு போலி கபசுர குடிநீர் சூராண விற்பனையை அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Leave your comments here...