பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள்: ஆளுநர் விரைந்து முடிவெடுக்க, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் – ராமதாஸ்

தமிழகம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள்: ஆளுநர் விரைந்து முடிவெடுக்க, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் – ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள்: ஆளுநர் விரைந்து முடிவெடுக்க, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் –  ராமதாஸ்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேர் விடுதலை குறித்து, ஆளுநர் விரைந்து முடிவெடுக்க, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்- இராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், அந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30-ஆவது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றமே ஆணையிட்டும், அந்த விஷயத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

இராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக 29 ஆண்டுகளுக்கு முன் 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி இரவு சி.பி.ஐயின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு பேரறிவாளனின் பெற்றோரிடம் கூறியது. விசாரணை முடிவடைந்ததும் அடுத்த நாள் காலையில் பேரறிவாளனை அனுப்பி வைப்பதாக விசாரணை அதிகாரிகள் உறுதியளித்தனர். அதை ஏற்று பேரறிவாளனை அவரது பெற்றோர் எந்த அச்சமும் இன்றி அனுப்பி வைத்தனர். ஆனால், இராஜிவ் கொலை குறித்த சில விளக்கங்களை பெறுவதற்கான விசாரணை என்று அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து எழுதி ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக சேர்த்தனர். ஒளி மங்கிய வேளையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்ட பேரறிவாளனின் வாழ்க்கை அதன் பின்னர் இருள் சூழ்ந்ததாக மாறி விட்டது.


பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பதின்வயதில் கைது செய்யப்பட்டு வாழ்நாளின் பாதியை இழந்து விட்ட பேரறிவாளனின் விடுதலைக்காக, தங்கள் உயிரில் பாதியை இழந்து விட்ட அவனது பெற்றோர் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய தமிழக ஆளுனர் எந்த மனிதநேயமும் இல்லாமல் அது குறித்த பரிந்துரையை கிடப்பில் போட்டு இன்னும் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்.

தகுதியின் அடிப்படையில் பார்த்தாலும், மனிதநேய அடிப்படையில் பார்த்தாலும் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டியவர் ஆவார். பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து பதிவு செய்ததன் மூலம் அவருக்கு தூக்குத் தண்டனை கிடைக்க தாம் காரணமாகி விட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டதுடன், அதை உச்சநீதிமன்றத்தில் மனுவாகவே தாக்கல் செய்திருக்கிறார். அதன் அடிப்படையிலேயே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும் ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை உருவாக்கியது யார்? என்பதை இன்னும் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடிக்கவில்லை. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக வினா எழுப்பினாலும் கூட, அதற்கு புலனாய்வு அமைப்புகளால் பதில் கூற முடியவில்லை. வெடிகுண்டு தயாரித்தவர்களே யார் என்று தெரியாத நிலையில், அதற்கு பேட்டரி வாங்கித் தந்தார் என்று பேரறிவாளனை கைது செய்து 30 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயமாகும்?

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் அதை விட இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்ட நிலையில், அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதனடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து 09.09.2018 அன்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. அவ்வாறு அனுப்பி இன்றுடன் 1007 நாட்கள் ஆகியும் அதன்மீது முடிவெடுக்கவில்லை.

அமைச்சரவையின் பரிந்துரை மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுனருக்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்ற ஒற்றை காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு, இந்த விஷயத்தில் ஆளுனர் காலதாமதம் செய்வது நியாயமில்லை. இதுதொடர்பாக எத்தகைய சட்ட ஆலோசனைகளை நடத்துவதாக இருந்தாலும் அதற்கு ஒரு மாதம் அவகாசம் போதுமானதாகும். அவ்வாறு இருக்கும் போது 1007 நாட்களாகியும் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை என்றால், அதற்கு 7 தமிழர்களும் விடுதலையாகி விடக் கூடாது என்ற எண்ணம் தான் காரணமாக இருக்க வேண்டும். ஆளுனர் என்ற உயர்ந்த பதவியில் இருப்பவர் சட்டத்தின் அடிப்படையில் தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, வேறு காரணங்களின் அடிப்படையில் முடிவெடுக்கக் கூடாது. அது அறமாக இருக்காது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் தொடர்ந்து 30-ஆவது ஆண்டாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருமே இந்த 30 ஆண்டுகளில் வாழ்நாளின் பெரும்பகுதியை இழந்து விட்டனர். இனியாவது அவர்கள் தங்களின் வாழ்நாளை குடும்பத்தினருடன் கழிக்க வேண்டும். அதை உணர்ந்து அவர்களின் விடுதலை குறித்து ஆளுனர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக ஆளுனருக்கு தமிழக அரசு உரிய முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Leave your comments here...