ஊரடங்கு உத்தரவால் முடங்கிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் : மீண்டும் துவங்கியதால் மகிழ்ச்சியில் மக்கள்..!!
- May 22, 2020
- jananesan
- : 1411
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் 25-3-2020 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. முதல் 2 கட்டங்களில் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிப் போய் இருந்தன. 3வது ஊரடங்கில் சில தளர்வுகளும் 4வது ஊரடங்கில் பெருமளவில் தளர்வுகளும் அனுமதிக்கப்பட்டு உள்ளன. எதிர்பாராத இந்த ஊரடங்கால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுற்றி உள்ள சிறு நகரங்களுக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை. உள்ளூரிலும் வேலை இல்லை. 100 வேலை என்று சொல்லப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் உறுதி திட்டமும் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நெருக்கடிகளால் வருவாய் ஏதும் இல்லாமல் கிராமத்தில் இருக்கும் ஏழை மக்கள் பரிதவித்து வந்தனர்.
மூன்றாம் ஊரடங்கின் பிற்பகுதியில்தான் இந்த 100 நாள் வேலைதிட்டத்தை தொடங்கலாம் என்று அரசாங்கம் அறிவித்தது. மேலும் 1-4-2020 முதல் 100 நாள் வேலைத்திட்டத்தில் கூலியானது 256 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பிறகு சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் 100நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்த, வருகின்ற புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் விக்கரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சிய ஒன்றியங்கள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 1,24,085 ஆகும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாயப்புத் திட்டத்தில் பதிவு செய்துள்ள கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை 60,419 ஆகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்கரவாண்டி ஒன்றியத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளித்துள்ளது. 14-5-2020 முதல் 20-5-2020 வரை இந்த ஒன்றியத்தில் 3,674 பேர் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வேலைகள் ஒதுக்கித் தரப்பட்டன. வரத்து வாய்க்கால் மேம்பாடு, குளம் மற்றும் ஏரி மேம்பாடு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் போன்ற பணிகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விக்கரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரெ.நந்தகோபால கிருஷ்ணன் ”2020-20ஆம் ஆண்டில் முதல் கட்டமாக 96 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. நீர் நிலை மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான இந்தப் பணிகள் தலா ரூ.5லட்சம் என்ற செலவில் ரூ.4,80,00,000 மொத்த மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன” எனத் தெரிவித்தார். ’இந்தத் தொகையில் உயர்த்தப்பட்ட கூலி ரூ.256 வீதம் 1,87,500 மனித வேலை நாட்களுக்கு கூலி தர முடியும். ஆனால் தொழிலாளி செய்கின்ற பணி அளவுக்கு ஏற்பவே கூலி வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த ஒன்றியத்தில் 8,500 முகக்கவசம் கொள்முதல் செய்து அனைத்துப் பணித்தளங்களிலும் தொழிலாளர்களுக்கு வழங்கி உள்ளோம். சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து கொள்கிறோம். கைகழுவ சோப் மற்றும் தண்ணீர் வைக்கின்றோம். முதலுதவிப் பெட்டியும் வைக்கின்றோம். கொரோனா தொற்று ஏற்படக்கூடிய எல்லா வாய்ப்புகளையும் முறியடித்து மக்கள் பாதுகாப்பாக வேலை செய்யும் சூழலை ஏற்படுத்தித் தருகிறோம்”, என நந்தகோபால கிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.
ஆசூர் ஊராட்சி செயலாளர் ஆர்.பாபு, கடந்த ஒரு வாரமாக எங்களது ஊராட்சியில் 86 நபர்கள் பணி செய்து வருகின்றனர். ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வரத்து வாய்க்கால் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து வருகிறோம் என்று கூறுகிறார். ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதவள்ளி கொரோனாவால் நானும் வீட்டுக்காரரும் வேலை இல்லாமல் இருந்தோம். வாழ்வாதாரம் இல்லாமல் தவித்தோம். இப்போதுதான் 100 நாள் வேலை கொடுத்து இருக்கிறார்கள். ஓடை வேலை செய்கிறோம். எங்களுக்குக் கூலி கிடைப்பதோடு ஊருக்கும் பயன் அளிக்கும் வேலையாக இது இருக்கிறது. எங்களுக்குத் தொடர்ந்து வேலை கொடுத்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியா கூறுவதாவது: ”கொரோனா பாதிப்பால் ஊரடங்கு வந்து விட்டது. பஸ் ஓடாததால் வேறு இடம் சென்று வேலை செய்ய முடியவில்லை. இப்போதுதான் வேலை கொடுத்து இருக்காங்க. 256 ரூபாய் கூலி அதிகமாக்கி இருப்பதா சொல்லி இருக்காங்க. இது எங்களுக்கு ரொம்ப நல்ல விஷயம். எங்க வாழ்வாதாரம் மேம்படும். நல்ல அக்கறையோட நாங்க வேலை செய்வோம்”.
கொட்டியாம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த ஆனந்தி, ”ஒன்னுமே இல்லாத சமயத்துல 100 நாள் வேலை எங்களுக்கு இப்ப ரொம்ப உதவியா இருக்குது. முடிந்த அளவு நாங்க நல்லாவே வேலை செய்கிறோம். நீர் ஆதார வேலை என்பதால் பொறுப்புடன் வேலை செய்கிறோம். கூலி உயர்வுக்கு மத்திய அரசுக்கு நன்றி,” என்கிறார். கிராமத்தில் இருப்பவர்கள் வருவாய் ஈட்டுவதற்காக இருக்கும் கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது புலம் பெயர்ந்து சென்றவர்கள் திரும்பி வரும்போது அவர்களை அரவணைக்கவும் இத்திட்டம் தயாராக உள்ளது.
Leave your comments here...