தென் மாநிலங்களில் இந்த விற்பனையில் நாம் தான் டாப்…! எதில் தெரியுமா…?
- May 9, 2020
- jananesan
- : 1459
- | TASMAC
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு, விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பல்வேறு மதுக்கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் மே 7ம் தேதி ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் திறக்கப்பட்டன. 43 நாட்களுக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட்டதால் மது விற்பனை அமோகமாக இருந்தது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் முதல் நாளில் ரூ.172 கோடிக்கு மது விற்பனையானது. அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது நாளான நேற்று 122 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றும் மதுரையில் தான் அதிகபட்ச விற்பனை இருந்தது. மதுரையில் 32.45 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியிருந்தது. தமிழகத்தில் 2 நாட்களில் மொத்தம் 294 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருக்கிறது.
இந்நிலையில் நாட்டில், மது விற்பனையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.
The #COVID19 pandemic-driven lockdown has dried up many a revenue source of states, few more important than the liquidity that flows from liquor sales. pic.twitter.com/vL5fmgAu7f
— CRISIL Limited (@CRISILLimited) May 8, 2020
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவின் மது விற்பனையில், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்கு, 45 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதாவது, நாடு முழுதும் மது குடிப்பதில், சரி பாதி பங்கை, இந்த ஐந்து மாநிலங்கள் பெற்றுள்ளன.மது விற்பனையில், நாட்டிலேயே தமிழகம், 13 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, 12 சதவீதத்துடன், இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகியவை, முறையே, 7, 6, 5 சதவீதத்துடன் அடுத்த மூன்று இடங்களில் உள்ளன.தென் மாநிலங்களில், மது விற்பனை வாயிலான வரி வருவாயில், தமிழகம், கேரளா ஆகியவை தலா, 15 சதவீத பங்குடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. கேரளாவில், 3.30 கோடி மக்கள் தான் உள்ளனர். ஆனால், அங்கு, மதுவுக்கு வரி விதிப்பு அதிகம் என்பதால், விற்பனை குறைவாக உள்ள போதிலும், வருவாய் அதிகமாக உள்ளது.மது விற்பனையில், டில்லி அரசுக்கு, 12 சதவீத வருவாய் கிடைக்கிறது. ஆனால், தேசிய அளவிலான மது விற்பனையில், இதன் பங்கு, 4 சதவீத அளவிற்கே உள்ளது. கர்நாடகா, ஆந்திரா ஆகியவை தலா, 11 சதவீதமும்; தெலுங்கானா, 10 சதவீத வருவாயும் பெறுகின்றன.
இந்தியாவில், மது விற்பனையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களுடன், டில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகிய, 12 மாநிலங்களின் பங்கு, 75 சதவீதமாக உள்ளது. இம்மாநிலங்கள், ஊரடங்கு காரணமாக, மது விற்பனை வாயிலான வருவாயை இழந்துள்ளன.அதே நேரத்தில், தற்போதைய சூழலில், மதுக் கடைகளை திறப்பதிலும் ஆபத்து உள்ளது. ஏனெனில், இந்தியாவில், கொரோனா பாதிப்பில், இந்த, 12 மாநிலங்களின் பங்கு, 85 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இதற்கிடையே டாஸ்மாக் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும், ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்யலாம் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...