மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது: மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகம்

மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது: மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது: மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

மதுகடைகளை திறக்காமல் மக்களுக்கு 2000 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ள நிலையில், நோய்ப்பரவலை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்களை நோய்த் தாக்காமல் தடுக்க ஊரடங்கை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலும், உயிரிழப்புகளும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதற்கு முக்கியக் காரணம் ஊரடங்கு ஆணை முழுமையாக கடைபிடிக்கப்பட்டது தான் என்றால் அது மிகையில்லை. தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்க் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் போதிலும், சென்னையிலும், சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பரவல் நீடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் நேற்று மட்டும் 203 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றில் சென்னையில் மட்டும் 176 தொற்றுகள் நிகழ்ந்துள்ளன. இவர்களையும் சேர்த்து சென்னையில் மட்டும் 1082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடந்த 10 நாட்களில் மட்டும் 724 பேருக்கு, அதாவது மூன்றில் இரு பங்கினருக்கு புதிய நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

சென்னையில் நோய்த்தொற்று அதிகமாக இருப்பதற்கு அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படும் போதிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது இது மிகவும் அதிகமாகும். முதல் மற்றும் இரண்டாவது ஊரடங்கு காலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலத்திலேயே சென்னையில் இந்த அளவுக்கு கொரோனா வைரஸ் பரவல்கள் நிகழ்ந்த நிலையில், நாளை மறுநாள் முதல் பொதுமக்களின் நடமாட்டம், தொழிற்சாலைகளின் இயக்கம், தனி நபர்கள் சேவை உள்ளிட்ட ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் நோய்ப்பரவல் மேலும் அதிகரிக்காமல் தடுப்பது தான் அனைவருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

சென்னையில் மக்கள் நெரிசல் மிகவும் அதிகமாக இருப்பதும், ஊரடங்கு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படாததும் தான் நோய்ப்பரவல் இந்த அளவுக்கு அதிகரித்ததற்கு காரணம் ஆகும். இனி வரும் காலங்களில் ஊரடங்கை மிகவும் கடுமையாக கடைபிடித்தால் மட்டும் தான் சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அடுத்த 15 நாட்களுக்கு பிறகாவது குறையும். அப்போது தான் அதற்கடுத்த சில வாரங்களுக்கு பிறகாவது சென்னையில் ஓரளவாவது இயல்பு நிலை ஏற்படும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் முதல் மற்றும் இரண்டாவது ஊரடங்குகளை முழுமையாக கடைபிடிக்கும்படி சென்னை மாநகர மக்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டு வந்தேன்.

சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் பொறுத்தவரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்ட 11 மாவட்டங்களில் ஓரளவுக்கும், ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள 24 மாவட்டங்களில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பச்சை மண்டலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் சில நிகழ்வுகளைத் தவிர, மற்ற அனைத்து சேவைகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை நாட்டின் பொருளாதாரத்திற்கு உயிரூட்டுவதற்கான நடவடிக்கைகளாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர, கடந்த 40 நாட்களாக இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை கொண்டாடுவதற்கான வாய்ப்பாக பார்க்கக்கூடாது. சென்னையில் உள்ளவர்களாக இருந்தாலும், பிற மாவட்டங்களில் வாழ்பவர்களாக இருந்தாலும் கட்டுப்பாடுகளை மறந்து கொண்டாட்ட மனநிலைக்கு சென்றால், நிலைமை மேலும் மோசமாகி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் கட்டுப்பாடுகளை மாநில அரசுகளும் உறுதியாக கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை மாநில அரசுகள் எந்த விதத்திலும் நீர்த்துப் போகச் செய்யக்கூடாது என்று தான் மத்திய அரசு கூறியிருக்கிறதே தவிர, கொரோனா வைரஸ் பரவல் வேகத்திற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை கடுமையாக்கிக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. எனவே, சென்னை போன்ற பகுதிகளில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு தேவையான கட்டுப்பாடுகளை நீடிக்கச் செய்வது குறித்து அரசு ஆராய வேண்டும்; அவற்றை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அடுத்ததாக பசுமை மண்டலங்களில் மதுக்கடைகளை சில விதிகளுக்குட்பட்டு திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தேவையற்றதாகும். கடந்த 40 நாட்களாக மதுக்கடைகள் மூடப் பட்டதன் பயனாக மது இல்லாத தமிழகத்திற்கு ஆதரவாக மக்களின் மனநிலை மாறியிருக்கிறது. அதை மதித்து தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் சரியானதாக இருக்கும். மாறாக, பசுமை மண்டல மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அது அங்கு மட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் சிதைத்து விடும். இதையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு மதுக்கடைகள் விஷயத்தில் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஊரடங்கு விதிகள் ஓரளவு தளர்த்தப்பட்டாலும், அது தமிழகத்திலுள்ள 90% மக்கள் வருவாய் ஈட்ட எந்த வகையிலும் பயனளிக்காது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் கூட, மக்களின் அச்சம் காரணமாக பல பகுதிகளில் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. கடந்த ஒன்றரை மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசு குறைந்தபட்ச வாழ்வாதார உதவிகளை வழங்காவிட்டால், அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே, ஏழை மக்களுக்கு அடுத்த இரு வாரங்களுக்கான வாழ்வாதார உதவியாக ரூ.2000 ரொக்கமும், வழக்கமாக வழங்கப்படுவது போன்ற உணவு தானியங்களும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...