திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கம்

அரசியல்தமிழகம்

திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கம்

திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கம்

திமுகவின் விவசாய அணியின் மாநில செயலாளராகவும், திமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. ராமலிங்கம், மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளர். அவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை விமர்சித்து கே.பி. ராமலிங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவது தேவையற்றது என்றும், இன்றைய சூழ்நிலையில் மக்கள் நலன் கருதி வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்திருப்பதை அனைத்து விவசாய சங்கங்களின் சாா்பில் பாராட்டுகிறோம். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். 144 தடை என்றால் அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடைதான். ஆகவே, அரசியல் கட்சித் தலைவா்கள் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தக் கூடாது என்று கூறியிருந்தார்.

இதனால் திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் தற்காலிகமாக நீக்குவதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அவரிடம் இருந்து விவசாய அணி மாநில செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில், திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கே.பி. ராமலிங்கத்திடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஆகையால் அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

Leave your comments here...