கொரோனா வைரஸ் எதிரொலி : தமிழக ஜெயில்களில் 1,184 கைதிகள் ஜாமீனில் விடுதலை..!!

தமிழகம்

கொரோனா வைரஸ் எதிரொலி : தமிழக ஜெயில்களில் 1,184 கைதிகள் ஜாமீனில் விடுதலை..!!

கொரோனா வைரஸ் எதிரொலி : தமிழக ஜெயில்களில் 1,184 கைதிகள் ஜாமீனில் விடுதலை..!!

தமிழகத்தில் 9 மத்திய ஜெயில்கள், 9 மாவட்ட ஜெயில்கள், 95 துணை ஜெயில்கள், 3 பெண்கள் சிறப்பு ஜெயில்கள் உள்ளன.இந்த ஜெயில்களில் சுமார் 15 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் விசாரணை கைதிகள், 30 சதவீதம் பேர் தண்டனை கைதிகள்.தற்போது கொரோனா வைரஸ் ஜெயில்களில் பரவாமல் இருக்க சிறைத்துறை பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜெயிலில் இருக்கும் கைதிகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடப்பட்டது.

அதில் முதல் கட்டமாக சிறு குற்றங்களில் ஈடுபட்டு ஜாமீன் கிடைக்காமல் இருப்பவர்கள், ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டவர்கள் ஜாமீன் வழங்குவதற்கு அரசு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை கோர்ட்டு மூலம் ஜாமீனில் விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டது.இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு ஆகியவற்றில் தொடரப்பட்ட வழக்குகளிலும் கைதிகளை விடுவிப்பதற்கு அனுமதி கிடைத்தது. இதையடுத்து கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம், பாலியல் வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஆகியவற்றில் கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் விடுவிக்க கூடாது என சிறைத்துறையினரும், போலீசாரும் முடிவு செய்தனர்.



மேலும் ரவுடிகள், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்களையும் ஜாமீனில் விடுவிக்க கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் அடிதடி, கலாட்டா, சிறு காயங்களை ஏற்படுத்துதல், சந்தேக வழக்கு, சிறு மோசடிகளில் ஈடுபடுதல், சிறிய அளவில் மது, கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோரை விடுவிப்பது என முடிவு செய்தனர். இதற்காக ஜெயில்களில் இருக்கும் விசாரணை கைதிகளையும், அவர்களது குற்ற வழக்குகளையும் ஆய்வு செய்யும் பணி சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு மூலம் ஜாமீன் பெற்று மதுரை மத்திய ஜெயிலில் இருந்து 2 பெண்கள் உள்பட 53 விசாரணை கைதிகள், சிவகங்கை, தேனி, அருப்புக்கோட்டை, திருப்பத்தூர் கிளை சிறைகளில் இருந்து 28 கைதிகள் என மொத்தம் 81 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள மத்திய ஜெயில்கள், மாவட்ட ஜெயில்கள், கிளை ஜெயில்கள் ஆகியவற்றில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணை கைதிகள் படிப்படியாக கோர்ட்டு மூலம் ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.புழல் ஜெயில் வளாகத்தில் உள்ள பெண்கள் சிறப்பு ஜெயிலில் இருந்து 36 பெண் கைதிகள், விசாரணை சிறையில் இருந்து 226 பேர், பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் இருந்து 62 பேர், வேலூர் மத்திய ஜெயிலில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் உள்ளிட்ட 1184 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர்.சிறு குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு தமிழக ஜெயில்களில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் இன்னும் 4000 பேர் உள்ளனர். அவர்களையும் விடுவிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஜாமீனில் விடுவிக்கப்படும் கைதிகள் ஏதேனும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள் என்று சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave your comments here...