இலங்கை டூ இராமநாதபுரம்- கடல் வழியாக தங்கம் கடத்திய ஆசிக், பாரூக் இளைஞர்கள் – கடலோர காவல்படை அதிரடி கைது..!

தமிழகம்

இலங்கை டூ இராமநாதபுரம்- கடல் வழியாக தங்கம் கடத்திய ஆசிக், பாரூக் இளைஞர்கள் – கடலோர காவல்படை அதிரடி கைது..!

இலங்கை டூ  இராமநாதபுரம்-  கடல் வழியாக தங்கம் கடத்திய ஆசிக், பாரூக் இளைஞர்கள் – கடலோர காவல்படை அதிரடி கைது..!

இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்திவரப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை மன்னார் வளைகுடா தீவு மணலில் புதைத்து வைக்கும் புதுயுக்தியை சமீப காலமாக கடத்தல்காரர்கள் பின்பற்றி வருகின்றனர். இதனிடையே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மன்னார் வளைகுடாவில் இருந்து கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கடந்த 3 ஆம் தேதி தகவல் கிடைத்தது. பின்னர் இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் இணைந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றனர்.

அப்போது மண்டபம் அருகே முயல் தீவுக்கும், வேதாளைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலில் சென்று கொண்டிருந்த ஒரு பைபர் படகை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த படகில் இருந்த 2 பேர் படகை நிறுத்தாமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடலோர காவல்படையினர் அந்த படகை விரட்டி பிடித்தனர்.பின்னர் அந்த படகையும், அதில் இருந்த மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த ஆசிக்(வயது 22), பாரூக்(22) ஆகியோரையும் கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தினர். படகையும் சோதனையிட்டனர்.



ஆனால் அதில் ஒன்றும் சிக்கவில்லை.தொடர்ந்து அந்த வாலிபர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. தீவிர விசாரணைக்கு பின்னர்தான் அவர்கள் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் அந்த தங்கக்கட்டிகளை, கடலோர காவல் படை துரத்தியதை தொடர்ந்து கடலில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்கம் வீசப்பட்ட கடல் பகுதியை ஜி.பி.எஸ். எனப்படும் கருவியின் உதவியுடன் அடையாளம் காணும் வகையில் அந்த இடத்தை பதிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து நேற்று காலை மண்டபத்தில் இருந்து மீண்டும் ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படையினரும், மத்திய வருவாய் புலனாய்வு துறையினரும் அந்த வாலிபர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு நடுக்கடலுக்கு புறப்பட்டனர். தங்கத்தை வீசியதாக கூறப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர்.


பின்னர் நீச்சல் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற இந்திய கடலோர காவல்படையினர் 3 பேர், கப்பலில் இருந்து கடலில் குதித்து ஆழத்துக்கு சென்று 5 பார்சல்களை எடுத்து வந்தனர். அந்த பார்சல்கள் கருப்பு நிறத்தில் இருந்தன. அவற்றின் உள்ளே ஏராளமான தங்கக்கட்டிகள் இருந்தன. பின்னர் அந்த தங்கக்கட்டிகள் இந்திய கடலோர காவல்படை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கமாண்டர் கடலோர காவல்படை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்பு நகை மதிப்பீட்டாளர் வரவழைக்கப்பட்டு எடை போட்டதில் மொத்தம் 14 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ 6.5 கோடி என்று கூறப்படுகிறது. கடந்த 5 வருடத்துக்கு பிறகு இவ்வளவு அதிகமான கடத்தல் தங்கம் இராமேசுவரம் பகுதியில் பிடிபட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். அதன் பின்னர் தற்போது 15 கிலோ தங்கக்கட்டிகள் பிடிபட்டுள்ளன. அதனை கடத்தி வந்த ஆசிக், பாரூக் ஆகிய 2 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave your comments here...