நான்தாப்பா பைக் திருடன் : ட்விட்டரில் டிரெண்டிங் ஆன ரஜினியை கலாய்த்த ஸ்டெர்லைட் போராளி

தமிழகம்

நான்தாப்பா பைக் திருடன் : ட்விட்டரில் டிரெண்டிங் ஆன ரஜினியை கலாய்த்த ஸ்டெர்லைட் போராளி

நான்தாப்பா பைக் திருடன் :  ட்விட்டரில் டிரெண்டிங் ஆன ரஜினியை கலாய்த்த ஸ்டெர்லைட் போராளி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ்ராஜ் என்பவர் “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷியாம் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை எட்டையபுரம் சாலையில் நிறுத்தி இருந்தார். அதனை திருடிச்சென்ற கொள்ளையர்கள், அந்த வாகனம் விற்பனைக்கு இருப்பதாக ஓஎல்எக்சில் விளம்பரம் வெளியிட்டு இருந்தனர். இதனை பார்த்த ஷியாம், ஓஎல்எக்சில் தனது வாகனத்தை விற்பனை செய்ய தயாராக இருந்த நபர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். கால்டுவெல் காலனிக்கு வரச்சொன்ன அந்த கொள்ளையர்கள் ஷியாமிடம் திருடிச் சென்ற வண்டிக்கு, அவரிடமே கறாராக பேரம் பேசியுள்ளனர். பணம் எடுத்து வந்து வாங்கிக் கொள்வதாக கூறிச்சென்ற ஷியாம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். பணத்துடன், வாகனக் கொள்ளையர்களை பிடிக்க சாதாரண உடையில் போலீசாரையும் ஷியாம் அழைத்துச்சென்றார். அப்போது ஷியாமிடம் திருடிய வாகனத்தைப் போன்ற மற்றொரு பழைய வாகனத்தை இருட்டில் வைத்து மோசடியாக கைமாற்றிவிட முயன்ற கொள்ளையனை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர்.

அவனைப் பிடித்து விசாரித்தபோது, ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து நீங்கள் யார்? என்று கேட்ட சந்தோஷ்ராஜ் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் தான் வாகனத்தை பறிகொடுத்தவரிடமே, திருடிய வாகனத்தை மோசடியாக விற்க முயன்றதால் காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கி உள்ளார் சந்தோஷ்ராஜ் என்கின்றனர் காவல்துறையினர். இதையடுத்து போராளித் திருடர் சந்தோஷையும், அவர் அளித்த தகவலின் பேரில் கூட்டாளிகளான மணிகண்டன் மற்றும் சரவணன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இதனை ரஜினி ரசிகர்கள் #நான்தாப்பா_பைக்_திருடன் தேசிய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

Leave your comments here...