தொன்மையான இந்திய மொழிகள் பாதுகாப்பும், மேம்பாடும் காலத்தின் தேவை – குடியரசுத் துணைத் தலைவர்..!

தமிழகம்

தொன்மையான இந்திய மொழிகள் பாதுகாப்பும், மேம்பாடும் காலத்தின் தேவை – குடியரசுத் துணைத் தலைவர்..!

தொன்மையான இந்திய மொழிகள் பாதுகாப்பும், மேம்பாடும் காலத்தின் தேவை – குடியரசுத் துணைத் தலைவர்..!

நமது தொன்மையான நாகரீக மாண்புகள், அறிவு, ஞானம் ஆகியவற்றின் சாளரமாக விளங்குவதால் தொன்மையான இந்திய மொழிகளின் பாதுகாப்பும், மேம்பாடும் காலத்தின் தேவை என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தாய்மொழியின் மேம்பாட்டுக்கான தேசிய இயக்கத்திற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் உள்ள செம்மொழி தமிழ் உயராய்வு மத்திய நிறுவனம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட போது குடியரசுத் துணைத் தலைவர் இவ்வாறு கூறினார்.

திருக்குறளை இந்திய மொழிகள் அனைத்திலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் மொழியாக்கம் செய்திருக்கும் இந்த மையத்தின் முயற்சிகளைத் திரு.நாயுடு பாராட்டினார். மனிதகுலம் விரிவான பயனைப் பெறுவதற்காக தொன்மையான, பிரபலமான தமிழ்ப் படைப்புகளையும், இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழர்களின் தொன்மையைப் பிரதிபலிப்பது தொடர்பான அனைத்தையும் ஆவணப்படுத்தி பாதுகாக்கும் இந்த இரு நிறுவனங்களின் நற்பணியை அவர் பாராட்டினார்.“உங்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தொன்மையான தமிழ்ச் சமூகம் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள உறுதிபூண்டிருக்கும் நிறுவனம் உலகில் வேறெங்கும் இல்லை” என்று இந்த இரு நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் அவர் தெரிவித்தார். இந்திய மொழிகளின் வளமான பாரம்பரியத்தை பராமரிக்கவும், மேம்படுத்தவும் தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்துவது அவசியம் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். “பல்வேறு மொழிகள் பேசும் நமது மக்கள் அனைவரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்ளூர் மொழிகளில் தகவல் தெரிவிப்பதற்கு மேலும் பல தொழில்நுட்பக் கருவிகளை நாம் கொண்டிருக்க வேண்டும்” என்று திரு.நாயுடு வலியுறுத்தினார்.இந்திய மொழிகளில் பேசுவதை, எழுதுவதை, தகவல் அனுப்புவதை கவுரமாகவும், பெருமிதமாகவும் கொள்ள வேண்டுமென்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். மக்கள் தங்களின் தாய்மொழியை வீட்டிலும், சமூகத்திலும், சந்திப்புகளிலும், நிர்வாகத்திலும் பயன்படுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

மொழி பாதுகாப்புக்கும், மேம்பாட்டுக்கும் பன்முக அணுகுமுறை தேவை என்பதை வலியுறுத்திய திரு.நாயுடு, இது ஆரம்பப்பள்ளி நிலையில் தொடங்கப்பட வேண்டுமென்றும் அதில் குழந்தையின் தாய்மொழியில் கல்வி அளிக்க வேண்டுமென்றும் கூறினார்.தலைமுறைகளுக்கு இடையே கலாச்சாரம், அறிவியல் ஞானம். உலகப் பார்வை ஆகியவற்றைக் கடத்தும் சாதனமாக இருந்தது மொழி என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம் ஊட்டம் பெற்று மனிதகுல பரிமாணத்தை மொழி உருவாக்குவதாகவும் கூறினார்.

ஆரம்ப நிலை ஆதாரங்களை, பயன்படுத்தி அறிவின் புதிய சொத்துக்களை வெளிக்கொண்டுவர ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு விடுத்தார். ‘ஞானத்திற்கு நாம் வலு சேர்த்து அதன் மூலம் நமது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் ஒளி பெறச் செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார்.

இந்த வகையில் செம்மொழித் தமிழ் உயராய்வு மத்திய நிறுவனம் மிக முக்கியமான பங்கினைக் கொண்டுள்ளது. அழகிய தமிழ் மொழியைப் பாதுகாத்து, பராமரித்து மேம்படுத்துவதன் மூலம் தேசத்திற்கு இந்த நிறுவனமும் அதன் ஆராய்ச்சியாளர்களும் மகத்தான சேவை செய்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.செம்மொழித் தமிழ் உயராய்வு மத்திய நிறுவனம் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும். இது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இது தமிழ் மொழியின் செவ்வியல் பகுதியோடு, அதாவது கி.பி. 600-க்கு முந்தைய காலத்தோடு, தொடர்புடைய ஆராய்ச்சிகளில் முதன்மையாக கவனம் செலுத்துகிறது.

இத்தகைய முயற்சிகள் அனைத்து கலாச்சாரங்கள், சமூகங்கள், மொழிகளின் சிறப்பைப் புரிந்து கொள்ளவும், மக்களை ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக்க் கொண்டு வரவும் உதவும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்றிருந்த போது, பல ஆண்டுகள் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் வெளிகொணரப்பட்ட, தமிழர்களின் வரலாற்றை மறுஆக்கம் செய்யும் வகையில் அமைக்கப்பட்ட, நிரந்தர கண்காட்சியைக் குடியரசுத் துணைத் தலைவர் பார்வையிட்டார்.இந்தக் கண்காட்சி 5 பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன. “தொல்காப்பியர் அரங்கம்” கலை வடிவங்களை காட்சிப்படுத்துகிறது. ”திருவள்ளூவர் அரங்கம்”, உலோகப் பொருட்கள் / வேளாண் கருவிகள், கல்வி, மருத்துவ சாதனங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்துகிறது. “கபிலர் அரங்கம்”, வீட்டு உபயோகப் பொருட்கள், அரைப்பான்கள் சேகரிப்பைக் கொண்டுள்ளது. மேலும் கோயில்கள் மற்றும் கடவுள்களைக் காட்சிப்படுத்துகிறது. “ஔவையார் அரங்கம்” பண்டைக்கால மன்னர்களின் வாழ்க்கை முறைகளைத் தத்ரூபமாக சித்தரிக்கிறது. “இளங்கோவடிகள் கலைக்கூடம்” கப்பல் கட்டுமானம், பாய்மரத் துணி ஆகியவற்றை காட்சிப்படுத்துகிறது.

மதுரை, ஸ்ரீரங்கம் ஆகிய நகரங்களில் காணப்படும் கலை நுட்பம் கொண்ட கோயில், நுணுக்கமான நகர வடிவமைப்பு ஆகியவற்றின் முழுமையான மாதிரி வடிவங்களால் குடியரசுத் துணைத் தலைவர் மிகவும் கவரப்பட்டார்.“தமிழர்களின் வரலாற்றை நன்கு அறிந்து கொள்ள இந்த தனித்துவமான நிறுவனத்திற்குப் பயணம் செய்ய நான் பரிந்துரைக்கிறேன். இங்கு வரும் ஒவ்வொரு பார்வையாளரும் மனநிறைவோடு திருப்தியடைவார்கள் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன்” என  கூறினார்.

குடியரசுத் துணைத் தலைவர் வருகையின் போது மாநில மீன்வளத்துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கே.பாண்டியராஜன், ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் திரு.பி.பெஞ்சமின், மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Leave your comments here...