நமது சுதந்திரம் எவ்வளவு கடுமையான வெற்றி என்பதை நினைவுப்படுத்துவதாக செல்லுலார் சிறை உள்ளது: வீர் சவார்க்கர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் அஞ்சலி செலுத்திய குடியரசுத் துணைத்தலைவர்..!

இந்தியா

நமது சுதந்திரம் எவ்வளவு கடுமையான வெற்றி என்பதை நினைவுப்படுத்துவதாக செல்லுலார் சிறை உள்ளது: வீர் சவார்க்கர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் அஞ்சலி செலுத்திய குடியரசுத் துணைத்தலைவர்..!

நமது சுதந்திரம் எவ்வளவு கடுமையான வெற்றி என்பதை நினைவுப்படுத்துவதாக செல்லுலார் சிறை உள்ளது: வீர் சவார்க்கர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் அஞ்சலி செலுத்திய குடியரசுத் துணைத்தலைவர்..!

போர்ட் ப்ளேரில் உள்ள செல்லுலார் சிறையையும், விடுதலைப் போராட்டத்தோடு தொடர்புடைய மற்ற பிற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் மாணவர்கள் பார்வையிட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் அனைத்து மாநில அரசுகளும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர்  வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார்.

வீர் சவார்க்கர் அடைக்கப்பட்டிருந்த தனிமைச் சிறை உட்பட செல்லுலார் சிறையைப் பார்வையிட்ட குடியரசுத் துணைத்  தலைவர் வெங்கையா நாயுடு, விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தச் சிறையில்  அடைக்கப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டபோதும் தீரத்துடன் இருந்த விடுதலைப் போராட்ட வீர்ர்களுக்கு அஞ்சலி  செலுத்தினார்.  அவருடன் அவரது மனைவி திருமதி உஷாம்மா, அவரது மகன், மருமகன், மகள், பேரன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

வீர் சவார்க்கர் அடைக்கப்பட்டிருந்த தனிமைச் சிறையைப் பார்வையிட்டது “உணர்ச்சி ததும்பும் அனுபவமாக” இருந்தது என்று குடியரசுத் துணைத்தலைவர் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வீர் சவார்க்கரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு பேரூக்கம் அளிப்பது என்று அவர் கூறினார். தாய்நாட்டின் மீதான நேசத்தைக் கைவிட மறுத்த விடுதலைப்போராட்ட வீரர்கள் சந்தித்த கொடுமையான, பெரும் துயரான சம்பவங்களைக் கொண்ட இந்த சிறை மறக்கமுடியாத நினைவூட்டலாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அந்நியர் ஆட்சியிலிருந்து நாட்டை விடுதலை செய்ய வேண்டும் என்ற உருக்கு போன்ற உறுதியாலும் தேசபக்த எழுச்சியாலும் உந்தப்பட்ட, தீரமிக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் அதனை ஒருபோதும் கைவிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.

நமது சுதந்திரம் எவ்வளவு கடுமையாக போராடி பெற்ற வெற்றி என்பதையும் மதிப்புமிக்கது என்பதையும் நினைவுபடுத்துவதாக செல்லுலார் சிறை உள்ளது என்று திரு நாயுடு கூறினார்.  நாட்டை நேசிப்போருக்கும் சுதந்திரத்தை மதிப்போருக்கும் இந்த சிறை ஒரு யாத்திரை தலமாக தற்போது உள்ளது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், இது காலனி ஆதிக்கத்தின் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதன் அடையாளமாகவும் விளங்குகிறது என்றார்.

நமது துணிச்சல்மிக்க விடுதலைப் போராட்ட வீர்ர்களின் எண்ணற்ற தியாகங்களின் வரலாறுகளை இளைய தலைமுறைக்கு நினைவுப்படுத்தும் வேளையில் அவர்கள், செல்லுலார் சிறைக்கு பயணம் செய்வது நாட்டின் மாபெரும் புகழை நிலைநிறுத்தவும் இந்த மகத்தான தேசத்தின் ஒற்றுமையையும்,. ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கவும் உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.1906ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட செல்லுலார் சிறையின் கைதிகள் சிறிய, தனிமைக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டனர். இதனால் இந்தச் சிறைக்கு ‘காலாபானி’ அல்லது ‘பிளாக் வாட்டர்ஸ்’ என்ற பெயர் வந்தது.  பட்டினி போடுதல், கடுமையான துன்புறுத்துதல், தனிமைப்படுத்துதல் என்ற மூன்று வகைகளில், மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்துவது மிகக் கொடுமையான தண்டனையாக இருந்தது.

தனிமைச் சிறை என்பதன் நோக்கம் விடுதலைப் போராட்ட வீர்ர்களின் மன உறுதியைக் குலைப்பதாகும் என்று திரு நாயுடு கூறினார். பல நூறு மைல்கள் தூரம் அனைத்துப் பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்ததால் இந்தச் சிறையிலிருந்து தப்பிக்க எள்ளளவும் வாய்ப்பிருக்கவில்லை.வீர் சவார்க்கர் தவிர மதிப்புமிக்க பலர் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். திவான்சிங் காலேபானி, ஃபாசல் இ ஹக் கைராபாடி, யோகேந்திர சுக்லா, பட்டுகேஷ்வர் தத், மவுலானா அஹமதுல்லா, மவுல்வி அப்துல் ரஹீம் சாதிக் பூரி, அலி அகமத் சித்திக்கி, மவுல்வி லியாகத் அலி, பாபாராவ் சவார்க்கர், சச்சிந்திரநாத் சன்யால் மற்றும் பலர் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

வீர் சவார்க்கர் இரட்டை ஆயுள் தண்டனைகளுடன் செல்லுலார் சிறைக்கு அனுப்பப்பட்டார். தனிமைச் சிறையில் இருந்த அவரது வாழ்க்கை மிகவும் துன்பத்தையும், துயரத்தையும் கொண்டிருந்தது. அவர்  மிகவும் கொடுமையாக நுகத்தடி சுமந்து செக்கிழுத்தார்.சவார்க்கர் மற்ற கைதிகளுக்கு ஊக்கமளிக்கும் சக்தியாக விளங்கினார். அவரது சகோதரரும் அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் ஒருவருக்கு ஒருவர் இதுபற்றி அறிந்திருக்கவில்லை.அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு, நாசிக் சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு, சிட்டகாங் ராணுவக் கிடங்கு சூறையாடல் வழக்கு என பிரிட்டிஷ் புனைந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிற  புரட்சியாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஏராளமான கொடுமைகளை எதிர்கொண்டனர்.

பிரிட்டிஷ் அரசால் அவை சதி வழக்குகள் என குறிப்பிடப்பட்டாலும், நாம் அவற்றை ‘விடுதலைப் போராட்ட வழக்குகள்’ என்றே குறிப்பிடவேண்டும் என குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார்.இந்தச் சிறையில் தியாகச் சுடரும் தியாகிகளின் பெயர் வரிசையும் புகழஞ்சலியாக இடம் பெற்றுள்ளன. இந்தச் சிறை தொடக்கத்தில் பிரமாண்டமான 3 மாடி கட்டுமானமாகவும் 7 பிரிவுக் கட்டடங்களைக்  கொண்டதாகவும் இருந்தது. அனைத்துப் பகுதிகளையும் கண்காணிக்கும் கோபுரம் ஒன்றும் அதன் மையப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்தச் சிறையில் 690 பேரை அடைத்து வைக்க முடியும்.நியாயமின்றி அடைக்கப்பட்ட, நமது விடுதலைக்கான போராட்ட நாயகர்களின் கொடுமையான துயரக் கதைகள் பலவற்றை இந்தச் சிறை கொண்டுள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய தண்டனை அமைப்பாக இருந்த இந்தச் சிறை, அந்நிய ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மை, ஒடுக்குமுறை, அநீதி ஆகியவற்றுக்கு எதிரான நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் தீரமிக்க எதிர்ப்பின் அடையாளமாகவும் விளங்குகிறது என்று குடியரசுத் துணைத்தலைவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...