2ஜி மேல்முறையீட்டு வழக்கு… விசாரணைக்கு தயார் – டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
- February 19, 2025
- jananesan
- : 205
- #2Gspectrumcase, #Kanimozhi, Araja, CBI, DMK

2ஜி அலைக்கற்றை மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு தயாராகி விட்டதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2008-ல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும் மத்திய அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. 2ஜி அலைக்கற்றையை முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. அமலாக்க துறையும் இது தொடர்பாக தனியே வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை விசாரணை அமைப்புகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த 2018-ல் மேல்முறையீடு செய்தது. எனினும் விசாரணை தாமதமாகி வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தயாராகி விட்டதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி விகாஸ் மகாஜன் அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் ஆஜரானார். அப்போது அவர், “இந்த வழக்கில் ஆவணங்கள் பெருமளவில் இருப்பதால் விசாரணைக்கு பல தேதிகளை நிர்ணயிக்க வேண்டும் அல்லது விசாரணை அட்டவணையை முடிவு செய்ய வழக்கை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 18-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்
Leave your comments here...