திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள் – திமுக அரசை மறைமுகமாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்..!

அரசியல்

திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள் – திமுக அரசை மறைமுகமாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்..!

திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள் – திமுக அரசை மறைமுகமாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்..!

திராவிட முதல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கும் குடும்ப சுயநல கூட்டம் தான் நம்முடைய அரசியல் எதிரி. கொள்கை கோட்பாட்டளவில் திராவிடத்தையும் தேசியத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப் போவதில்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள் என்றும் விஜய் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் – விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் இன்று (அக்.27) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. மாநாடு தொடங்கியதும் அரங்கில் விஜய் திரைப்படங்களில் இடம்பெற்ற அரசியல் பேசும் பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னர் தவெக கட்சியின் கொடிப் பாடல் இசைக்கப்பட்டது.

மாநாட்டுப் பந்தலில் இருந்த மேடையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் சோபனா அமர்ந்திருக்க, கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. இதனை தொடர்ந்து மாலை 4 .03க்கு மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு உற்சாகமாக வந்து தொண்டர்களைப்பார்த்து கையசைத்தார்.

பின்னர் 800 மீட்டர் நீளமுள்ள ரேம்பில் நடந்துவந்தார். அப்போது தொண்டர் ஒருவர் அவர்மீது வீசிய கட்சி துண்டை தன் தோளில் முதன் முதலாக அணிந்து கொண்டார். இதனை தொடர்ந்து தொண்டர்கள் வீசிய துண்டுகளை தன் தோளில் அணிந்து கொண்டார். தவறிய துண்டுகளை அவருடன் வந்த பவுன்சர்கள் சேகரித்தனர். பின்னர் மீண்டும் மேடைக்கு திரும்பிய விஜய் தன் தோளில் இருந்த கட்சி துண்டுகளை அங்கிருந்த டீபாயில் கவனமாக வைத்தார். ஒரே ஒரு துண்டை மட்டும் அணிந்து கொண்டார்.பின்னர் மேடையில் ஏறிய அவர் கண்கள் கலங்க கூட்டத்தைக் கண்டு கையசைத்தார்.

பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். மாலை 4.21 மணியளவில் கட்சியின் கொடியை விஜய் ஏற்றிவைத்தார். மேடையில் இருந்தவாறே பட்டனை அழுத்தி அவர் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து தவெக கொடிப் பாடல் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் கட்சி நிர்வாகிகள் மாநாட்டில் ஒவ்வொருவராக மேடையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன் பின்னர் உறுதிமொழி வாசிக்கப்பட தவெக தொண்டர்கள் உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து பொதுச் செயலாளர் ஆனந்த் உரையாற்றினார். அதனையடுத்து கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது.

கட்சியின் கொள்கைப் பாடல்

‘சாதி, மத, பேதங்களை நீக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்’, ‘சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவோம்’, ‘சமூக நீதி பாதையில் பயணிப்போம்’ போன்ற வரிகள் கொள்கை பாடலில் இடம்பெற்றுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தலைப்பில் இந்தப் பாடல் வெளியாகி உள்ளது. ‘துப்பார்க்கு துப்பாய’ திருக்குறள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது முதல் கோட்பாடு. மதம், சாதி, இனம், மொழிக்குள் மனித சமூகத்தை சுருக்கக் கூடாது, மக்களை பாகுபடுத்தாமல் சம உரிமைகளை வழங்க வேண்டும், மாநில மற்றும் மத்திய அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்போம், விகிதாச்சார இட ஒதுக்கீடே உண்மையான சமூக நீதி, எல்லா வகையிலும் ஆண்களுக்கு பெண்கள் சமம், இருமொழிக் கொள்கையே தவெக-வின் மொழிக் கொள்கையாகும், தமிழை வழக்காடு மொழி ஆக்குவது, பகுத்தறிவு சிந்தனைகள் வளர்ப்போம், பிற்போக்கு சிந்தனைகளை புறக்கணிப்போம், அரசு மற்றும் தனியார் துறையில் ஊழலற்ற நிர்வாகம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்போம், போதையில்லா தமிழகம் படைப்போம் உள்ளிட்டவை தவெக-வின் அடிப்படை கொள்கைகளாக இருப்பது இப்பாடலின் மூலம் புலப்படுகிறது. இந்தப் பாடலில் விஜய் பேசுவதும் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் ‘மதச்சார்பற்ற சமூக நீதி’ கொள்கையோடு அரசியல் செய்ய வருகிறேன் எனக் கூறுகிறார்.

கட்சியின் கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார் அறிவித்து பேசியதாவது: `பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது எங்களின் கோட்பாடாகும். தமிழக மக்களின் தனிமனித, சமூக, பொருளாதாரத்தை உருவாக்குவது நம் குறிக்கோளாகும். ஜனநாயகம் ஒரு நாட்டின் மக்களை சாதி, மதம் என பாகுபடுத்தாமல் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதாகும்.

விகிதாச்சார பங்கீடு அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். பாலின சமத்துவம், மதச்சார்பின்மை, மாநில தன்னாட்சியே அம்மாநில மக்களின் உரிமையை மீட்பதே நம் கொள்கை. தவெக இருமொழி கொள்கையை பின்பற்றுகிறது. தமிழ்வழி கல்வியில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். எங்கும் அரசியல் தலையீடு அற்ற நிலையை உருவாக்குவோம். சுற்றுசூழல், இயற்கை வளங்களை பாதுகாப்பது. திண்டாமை ஒழிப்பு, போதை இல்லா தமிழகம், இதுவே நம் கொள்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கட்சியின் செயல்திட்டங்களை கேத்ரின் பாண்டியன் கூறியது, நிர்வாக சீர்திருத்தம் வேண்டும். அரசு, தனியார் நிறுவனங்களில் அரசியல் தலையீடு இருக்காமல் வழிவகுக்கப்படும். அரசு நிர்வாகம் முற்போக்கு சிந்தனையோடு விளங்கும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தை விதிமுறை உருவாக்கப்படும். மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும். சனாதனத்துக்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும், சாதிவார கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ் வழி கல்வியில் ஆராய்ச்சி கல்விவரை படிக்கலாம் என்ற நிலை உருவாக்கப்படும். கல்வி மாநில உரிமையில் கொண்டுவரப்படும். ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும். கட்சியில் மூன்றில் ஒரு பங்கு பகுதி கட்சி, பதவி அளிக்கப்பட்டு பின் படிப்படியாக அது 50 சதவீதமாக உயர்த்தப்படும்.

மகளிர் காவல் நிலையங்கள் போல, மாவட்டதோறும் பெண்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்படும் . மண்டலவாரியாக துணை நகரங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சீரமைக்கப்படும். வனப்பரப்பளவு அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கட்சியின் தலைவர் விஜய் சிறப்புரை ஆற்றினார்:- தன் பெற்றோரிடம் ஆசி பெற்ற பிறகு விஜய் உரையை தொடங்கினார். “பால் மனம் மாறாமல் இருக்கும் குழந்தைக்கு தாயின் பாச உணர்வை சொல்ல தெரியாது. அந்த குழந்தைக்கு பாம்பை கண்டாலும் ஏற்படும் அந்த பய உணர்வை சொல்லத் தெரியாது. அது தாயை பார்க்கின்ற அதே சிரிப்போடு தான் பாம்பை பிடித்தும் விளையாடும். இங்க அந்த பாம்பு அரசியல். அதை பிடித்து விளையடும் குழந்தை நான்.

அரசியலில் கவனமாக தான் களமாட வேண்டும். அனைவருக்கும் எனது உயிர் வணக்கங்கள். நாம் அனைவரும் ஒன்று. நான் மற்ற கட்சி தலைவர்களை குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பமும் தான் மாற்றம் காண வேண்டுமா? அரசியலிலும் மாற்ற வேண்டும்.

இந்த மண்ணுக்காக வாழ்ந்தவர்கள் தான் நமது கொள்கை தலைவர்கள். அந்த வகையில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர் தவெக-வின் கொள்கை தலைவர்கள். பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்பதால் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல

நம்மை பார்த்து யாரும் விசிலடிக்கும் கூட்டம் என சொல்லக்கூடாது. நாம் விவேகமாக செயல்பட வேண்டும். நமது வலிமையை அதில் காட்ட வேண்டும். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையில் எடுக்க மாட்டோம். சொல் முக்கியமில்லை செயல் தான் முக்கியம். அரசியலில் சமரசத்தத்துக்கோ, சண்டை நிறுத்தத்துக்கோ இடமில்லை. நமது அரசியல் நிலைப்பாடு தான் நமது எதிரி யார் என்பதை காட்டும். பிளவுவாத சக்திகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியலை எதிர்ப்பதும் தான் நமது கொள்கை.

இந்த ஊழல்வாதிகள் கபடதாரிகள். கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடுவார்கள். தமிழகத்தில் சாதி இருக்கும். ஆனால் அது அமைதியாகவே இருக்கும். மக்களுக்காக நிற்பது தான் எங்கள் கொள்கை. நாங்கள் மாற்று அரசியல் என சொல்லி ஏமாற்றப் போவதில்லை. நான் எக்ஸ்ட்ரா லக்கேஜாக இங்கு வரவில்லை. தமிழகத்தை முதன்மையாக மாற்றுவதே நம் நோக்கம். இதிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை.

நாங்கள் சமூக வலைதளத்தில் கம்பு சுத்த வந்தவர்கள் அல்ல; மக்கள் நலனுக்காக வாள் ஏந்த வந்தவர்கள். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பிறரை அடி பணிய வைக்க மாட்டேன். தமிழகத்தின் வளர்ச்சியை எதிர்பார்த்து இருக்கும் மக்களுக்காக உங்களில் ஒருவனாக அரசியலில் களம் கண்டுள்ளேன்.

எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் அளிக்க உள்ள தவெக-வுக்கு செலுத்த உள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும். திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்ன தான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும் எங்களிடம் அது எடுபடாது. பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி. அவர்கள் செய்வது பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?

திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது இரு கண்கள். தகுதி இருந்தும் நீட் தேர்வு தடையாக உள்ளது. எனது சகோதரி வித்யாவை இழந்த போது ஏற்பட்ட அதே வலியை சகோதரி அனிதாவை உயிரிழந்த போதும் நான் பெற்றேன்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். நான் கூத்தாடி தான். அரசியலுக்கு எம்ஜிஆர், என்டிஆர் வந்த போதும் கூத்தாடிகள் என்று தான சொன்னார்கள். கூத்து என்பது இந்த மண்ணோடும் மக்களுடன் கலந்து. நான் உங்களில் ஒருவன். கூட்டணியில் இடம்பெறுவோருக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிங்கப்படும்” என அவர் பேசினார். 45 நிமிடங்களுக்கும் மேல் விஜய் உரையாற்றினார்.

விஜய் பேசியதில் கவனிக்கத்தக்க விஷயமாக:-

திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை சிலர் ஏமாற்றுவதாக ஆளும் திமுக அரசை மறைமுகமாக அவர் கடுமையாக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாஸிசம் என்ற பெயரைக் குறிப்பிட்டும், பிளவுவாத அரசியல் செய்வோர் எனக் மத்திய பாஜக அரசையும் அவர் விமர்சித்துள்ளார்.

பிளவுவாத சக்திகள், ஊழல் கபடதாரிகள் ஆகிய இரு பிரிவினருமே நம் எதிரிகளே!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.மாலை 5.30 மணியளவில் தனது உரையை தொடங்கிய விஜய், மாலை 6.15 மணியளவில் தனது உரையை நிறைவு செய்தார்.

Leave your comments here...