பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம்.. காலாவதி தேதி 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்வு..!
பழனி பஞ்சாமிர்த டப்பாக்களில் காலாவதி தேதி 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. பழனியில் பஞ்சாமிர்த டப்பாக்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தவிர, கோயில் நிர்வாகம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் 470 கிராம் டப்பா ரூ.40-க்கும், டின் ரூ.45-க்கும், 200 கிராம் பஞ்சாமிர்தம் டப்பா ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சாதாரண நாட்களில் 20 ஆயிரம் பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனையாகும். திருவிழாக் காலங்களில் தினமும் 1.50 லட்சம் டப்பாக்கள் வரை விற்பனையாகும். தமிழகத்தில் உள்ள கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது பழநி கோயில் பஞ்சாமிர்தத்துக்கு மட்டுமே.
இந்நிலையில் பஞ்சாமிர்தத்தின் தரத்தை அறிய தேவஸ்தானம் முடிவு செய்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (fssai) அனுமதி பெற்ற தனியார் உணவு பகுப்பாய்வு ஆய்வகத்துக்கு பஞ்சாமிர்த மாதிரியை அனுப்பியது. வெவ்வேறு நாட்களில் தயார் செய்த பஞ்சாமிர்தம் ஆய்வுக்கு அனுப்பி சோதனை செய்யப்பட்டது. ஆய்வின் மூலம், பழநி கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தரமானது என்றும், 50 நாட்கள் வரை கெடாமல் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் அபிஷேக பஞ்சாமிர்தத்தின் காலாவதியை 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதன்படி, 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக காலாவதி தேதி மாற்றி அச்சடிக்கும் பணி நடைபெற்றது. தற்போது பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
Leave your comments here...