போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது… பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம் – ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சு..!

இந்தியாஉலகம்

போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது… பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம் – ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சு..!

போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது… பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம் –   ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி  பேச்சு..!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றார். இந்தியா, ரஷ்யா இடையிலான 22-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் விதமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். தொடர்ந்து உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மோடியும், புதினும் அதிகாரபூர்வமாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு இரு தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்தச் சந்திப்பின்போது புதினிடம் பேசிய பிரதமர் மோடி, “ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக அப்பாவிக் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது. பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம். அமைதியை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்கும். அமைதியை மீட்டெடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது.

இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது என்பதை நான் உங்களுக்கும் உலக சமூகத்துக்கும் உறுதியளிக்கிறேன். புதிய தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற, அமைதிப் பேச்சுகள் தேவை. மாறாக வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் வெற்றி கிடைக்காது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதலால் கடந்த 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தின் சவால்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. அனைத்து வகையான தீவிரவாதத்தையும் நான் கண்டிக்கிறேன்” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

முன்னதாக, ரஷ்யா சென்ற பிரதமர் மோடியும், அதிபர் புதினும் பரஸ்பரம் தங்களது நட்பினை வெளிப்படுத்தினார். அப்போது ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டனர்.

இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், இதனை மேற்கோள்காட்டி, உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். அதில் மூவர் சிறுவர்கள். 170 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைனில் அமைந்துள்ள மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இளம் புற்றுநோயாளிகள் தான் அவர்களது இலக்கு. பலர் அதன் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒரு உலகில் கொடுங்கோன்மை செயல்களை செய்யும் குற்றவாளியை மாஸ்கோவில் கட்டி அணைப்பதை பார்க்கும் போது அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது” என வேதனை தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டின் ஐந்து நகரங்களின் மீது திங்கட்கிழமை அன்று ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் முக்கிய கட்டிடங்களை தாக்கியது. இதில் அந்த குழந்தைகள் மருத்துவமனையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...