தமிழ்நாடு அரசு பள்ளி இலவச சைக்கிள்களில் தரம் இல்லை – ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு..!

அரசியல்

தமிழ்நாடு அரசு பள்ளி இலவச சைக்கிள்களில் தரம் இல்லை – ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு..!

தமிழ்நாடு அரசு பள்ளி இலவச சைக்கிள்களில் தரம் இல்லை – ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு..!

தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்கள் தரமற்றவையாக இருப்பதால் அவற்றை விற்க வேண்டிய நிலையில் மாணவர்கள் தள்ளப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் கடந்த 2001 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. முதலில் உயர்நிலை கல்வி படிக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே இருந்தது. தற்போது தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எந்த வேறுபாடின்றி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இலவச சைக்கிள் பெற விண்ணப்பதாரர் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 11 ஆம் வகுப்ப படித்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசு உதவி பெறும் அல்லது பகுதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களாக இருத்தல் வேண்டும். பல ஏழை மாணவர்கள் பள்ளியிலிருந்து பல கி.மீ. தூரம் வசிப்பதாலும், அவர்கள் நடந்தே பள்ளிக்கு வந்து செல்ல வேண்டியதாலும், இத்தனை சிரமம் இருப்பதால் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாததாலும் இந்த இலவச சைக்கிள் திட்டம் கொண்டு வரப்பட்டது. பள்ளிகளைத் தவிர, மாநிலத்தில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் அல்லது ஐடிஐகளில் படிக்கும் தேர்வர்கள் விண்ணப்பித்து இந்த இலவச சைக்கிளை தமிழக அரசிடம் இருந்து பெறலாம்.

இந்த இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா பரவலின் போது நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து 2022 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் பணிகள் வழங்கப்பட்டது. அது போல் இலவச லேப்டாப்களும் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே?இந்தத் தரமில்லாத சைக்கிள்களைத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறயுள்ளார்.

Leave your comments here...