ரசிகனின் கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் – ரசித்து, வேடிக்கை பார்த்த பவித்ரா..!

சினிமா துளிகள்

ரசிகனின் கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் – ரசித்து, வேடிக்கை பார்த்த பவித்ரா..!

ரசிகனின் கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் – ரசித்து, வேடிக்கை பார்த்த பவித்ரா..!

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் தர்ஷன் தூகுதீபா. இவருடைய தீவிர ரசிகரான ரேணுகாசாமி (வயது 33) என்பவர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து ரேணுகாசாமியை படுகொலை செய்து விட்டனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனது தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்களை அனுப்பியதால் நடிகர் தர்ஷனே ரேணுகாசாமியை கொடூரமாக தாக்கியதாகவும், அதில் அவர் இறந்து போனதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில், அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. ரசிகர் ரேணுகாசாமி படுகொலை தொடர்பாக நடிகர் தர்ஷனை போலீசார் சமீபத்தில் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் தர்ஷனின் முன்னாள் மேலாளர் மல்லிகார்ஜுன் சங்கனகவுடர் என்பவர் 8 ஆண்டுகளாக காணாமல் போயுள்ளார். நடிகர் தர்ஷனிடம், மல்லிகார்ஜுன் ரூ.2 கோடி வரை கையாடலில் ஈடுபட்டு உள்ளார் என தகவல் தெரிவிக்கிறது. தர்ஷனின் பண்ணை வீட்டின் மேலாளராக இருந்த ஸ்ரீதர் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், ரேணுகாசாமியை கொடூர வகையில் சித்ரவதை செய்தபோது, அதனை நடிகை பவித்ரா கவுடா அருகேயிருந்து ரசித்து, வேடிக்கை பார்த்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், ரேணுகாசாமியை பெங்களூருவில் உள்ள ரகசிய இடத்திற்கு கடத்தி கொண்டு சென்றபோது, அவர்களுடன் பவித்ரா மற்றும் தர்ஷன் இருவரும் சேர்ந்து கொண்டனர். ரேணுகாசாமியை கம்புகளால் அடித்தும், பலமுறை மின்சாரம் பாய்ச்சியும் துன்புறுத்தி உள்ளனர்.

அப்போது, அதனை பவித்ரா சிறிது நேரம் கூட இருந்து பார்த்திருக்கிறார்.ரேணுகாசாமி வெளியிட்ட பதிவுக்காக அவரை தண்டிக்கும்படி, பவித்ராவே தர்ஷனை தூண்டி விட்டுள்ளார் என பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ரேணுகாசாமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், பல்வேறு காயங்களால், அதிர்ச்சியில் ரத்த கசிவு ஏற்பட்டு உள்ளது. அவருடைய மர்ம உறுப்பின் முக்கிய சுரப்பிகள் சேதமடைந்து உள்ளன என்றும் அவருடைய ஒரு காது காணாமல் போயுள்ளது என்றும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படுகொலை சம்பவத்தில் உண்மை வெளிவராமல் இருக்க நடிகர் தர்ஷன் ரூ.50 லட்சம் பணம் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவற்றில் ரூ.30 லட்சம் பணம் பிரதோஷ் என்ற பவன் என்பவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இவரே, கடத்தல், கொலை மற்றும் உடலை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்பார்வை செய்திருக்கிறார்.

நடிகர் தர்ஷனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிப்பு

ரசிகர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஜூலை 4-ந்தேதி வரை அவர் காவலில் வைக்கப்படுவார். அவரை பரப்பன அக்ரஹார சிறைக்கு போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.அவருடைய 4 கூட்டாளிகளும் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கர்நாடகாவில், தனித்தனியாக வெவ்வேறு சிறைகளில் அடைக்க வேண்டும் என அரசு சிறப்பு வழக்கறிஞர் கோரினார். இதற்கு தர்ஷனின் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது, அவரை பார்ப்பதற்காக திரண்டிருந்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். போலீசாரின் வேனில் இருந்த தர்ஷனும் அவர்களை நோக்கி கைகளை அசைத்தபடி சென்றார். கடந்த 2 நாட்களுக்கு முன், பவித்ரா கவுடா உள்பட 13 பேர் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Leave your comments here...