குவைத் தீ விபத்து – 42 இந்தியர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்- வெளியான தகவல்!..!

இந்தியாஉலகம்

குவைத் தீ விபத்து – 42 இந்தியர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்- வெளியான தகவல்!..!

குவைத் தீ விபத்து – 42 இந்தியர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்- வெளியான தகவல்!..!

குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 42 பேர் இந்தியர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மாங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர்.  50 பேர் காயமடைந்தனர்.

இதனிடையே,  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  குவைத் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யாவிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யா விடம் பேசினேன்.  தீ விபத்தை அடுத்து குவைத் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அப்போது விளக்கப்பட்டது.  இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்றும் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு அனுப்ப வலியுறுத்தப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  உயிரிழந்த இந்தியர்களின் உடல்களைக் கொண்டு வர இந்திய விமானப் படை விமானம் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  “தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை குவைத் அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை செய்து வருகிறார்கள்.  உயிரிழந்த இந்தியர்களின் உடல்களைக் கொண்டு வர இந்திய விமானப்படை விமானம் தயார் நிலையில் உள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில்,  42 பேர் இந்தியர்கள் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், மற்றவர்கள் பாகிஸ்தான்,  பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் நேபாள நாடுகளைச் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளனர்.

அந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.  அதாவது: தீவிபத்து ஏற்பட்ட குடியிருப்பு மொத்தம் 6 மாடிகளை கொண்டது. இதில் இந்தியர்கள் உள்பட 195 பேர் வரை தங்கியிருந்துள்ளனர்.  இரவு பணியின் காரணமாக 20 பேர் அங்குள்ள அறையில் இல்லை.  இத்தகைய சூழலில் தான் அதிகாலை 4.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பின் பிளாக் 4ன் தரைதளத்தில் எகிப்து செக்யூரிட்டி கார்டின் குடியிருப்பில் உள்ள சமையலறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் தீத்தடுப்பு சுவர்களை பயன்படுத்தி இருந்தாலும், குடியிருப்பு முழுவதும் புகை மண்டலமாகப் பரவியதால் தான் இந்த பெரும் விபத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் அபுதாபியில் உள்ள தங்கள் பணியிடங்களுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படும் அந்த சமையலறையில் வைக்கப்பட்டிருந்த 21 சிலிண்டர்கள் முழுவதுமாக வெடித்தது தான் காரணமாக இருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் ஊகிக்கப்படுகிறது.

கேரளாவைச் சேர்ந்தவர்கள்: உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் என குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிலையில், அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கேரளா அச்சம் தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது

இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த இரண்டு முக்கிய தொழிலதிபர்களான யூசுப் அலி மற்றும் ரவி பிள்ளை ஆகியோரும் நிவாரண உதவி அளிக்க முன் வந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று யூசுப் அலியும், ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று ரவி பிள்ளையும் அறிவித்துள்ளதாக கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. இதன்மூலம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மொத்த இழப்பீடாக தலா ரூ.12 லட்சம் வழங்கப்படும்.

இந்த தீ விபத்து தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் ஒரு ஐஏஎஸ் அலுவலரை குவைத்துக்கு விரைவாக அனுப்பிவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...