அக்னிவீர் திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் – பாஜகவிற்கு நிதிஷ்குமார் போடும் கண்டிஷன்..!

இந்தியா

அக்னிவீர் திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் – பாஜகவிற்கு நிதிஷ்குமார் போடும் கண்டிஷன்..!

அக்னிவீர் திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் – பாஜகவிற்கு நிதிஷ்குமார் போடும் கண்டிஷன்..!

18வது மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கான இடங்களை பாஜக கைப்பற்றாததால், அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஆதரவை ஆந்திராவின் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவும், பீகாரின் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரும் வழங்கியுள்ளனர். எனினும், இதுதொடர்பான பேச்சுகளே தற்போது விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

சந்திரபாபு நாயுடு, சபாநாயகர் பதவியுடன் சில முக்கியமான துறைகளுக்கு கேபினெட் அமைச்சர் பதவிகளைக் கேட்டிருப்பதாகவும், நிதிஷ்குமாரும் துணை சபாநாயகர் பதவியுடன், சில முக்கிய துறைகளுக்கு கேபினெட் மற்றும் இணையமைச்சர் பதவிகளைக் கேட்டிருப்பதாகவும் குறிப்பாக, இரு மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து கேட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதில் சிலர், ஒரே துறைகளைக் குறிவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபும் இதையும் தாண்டி சில விசயங்களை செய்து தர வேண்டும் என சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டபோது பீகாரில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டன. இது, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதாலேயே இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நிதிஷ்குமார் கட்சி விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இளைஞர்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பை சமாதானம் செய்யும் வகையில், அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் கேசி தியாகி கூறுகையில், “அக்னிவீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதற்கு நல்ல வரவேற்பு இல்லை.  மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.  தேர்தல்களிலும் அதன் தாக்கத்தை நாங்கள் கண்டோம்.  எனவே இந்த ராணுவ ஆட்சேர்ப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.  அக்னிவீர் திட்டத்தால் ஒரு பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் இதில் இருக்கும் பல குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அந்த குறைகள் குறித்து விரிவாக ஆலோசித்து,  அவற்றை நீக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.  பொது சிவில் சட்டம் குறித்து ஏற்கனவே நிதிஷ்குமார் சட்ட கமிஷன் தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.  இதற்கு நாங்கள் எதிராக இல்லை.  ஆனால், அனைத்து தரப்பு உடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என விரும்புகிறோம்”  என்றார்.

Leave your comments here...