தமிழகத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு – லஞ்ச ஒழிப்பு போலீஸார் 50 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…!

தமிழகம்

தமிழகத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு – லஞ்ச ஒழிப்பு போலீஸார் 50 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…!

தமிழகத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு –  லஞ்ச ஒழிப்பு போலீஸார் 50 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…!

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஏழை – எளிய, நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை, நனவாக்கும் வகையில் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சத்து 77 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியை துறை சார்ந்த அதிகாரிகள் சிலர் மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது. மேலும், இதுதொடர்பாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்புத்துறை) போலீஸாருக்கு புகார்கள் சென்றன. இப்புகார்கள் குறித்து அப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், 2016 முதல் 2020-ம்ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அதிகாரிகள் 50 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சமீப காலங்களில் மட்டும் அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 4 வழக்குகள் கடந்த 6 மாதங்களில் பதிவானவை.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடியாக இது பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த 20-ம்தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளை கட்டாத பயனாளிகளுக்கு விதிகளை மீறி சட்ட விரோதமாக ரூ.31.66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மோசடி நடைபெற்றது எப்படி? – இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கூறியதாவது: ஏற்கெனவே சொந்த வீடுகள் உள்ள பயனாளிகள் மற்றும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்கள் பலரும் லட்சக்கணக்கான பணத்தை முறைகேடாக பெற்றுள்ளனர். அதுவும் பெரும்பாலானோர், வீடுகளை முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையிலேயே பணி முடிந்ததாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து அதிகாரிகளின் துணையுடன் பணப்பலனை பெற்றுள்ளனர். இதுபோன்ற விவகாரங்களில் நாகையில் 146 பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் ரூ.1 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக சுமார் 10 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலும் பஞ்சாயத்து செயலாளர்கள், தொகுதி மேம்பாட்டு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் தங்கள் பெயர்களை பயனாளிகள்போல பதிவு செய்து போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பண பலன்களை பெற்றுள்ளனர். இன்னும் சிலரோ உறவினர்கள், வேண்டப்பட்டவர்கள் விதிகளை மீறி பணப்பலன் பெற உதவியுள்ளனர்.

தேவையான ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபிறகே திட்டத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். மேலும், பயனாளிகளின் நிதி நிலைமை அவர்களின் பொருளாதார நிலைமையையும் ஆராய வேண்டும். அதன் பிறகே பயனாளிகளுக்கு முதல்கட்ட நிதி வழங்க முடியும். ஆனால், இதில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. அதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave your comments here...