காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை வெளியிடுக – முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்..!

தமிழகம்

காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை வெளியிடுக – முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்..!

காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை வெளியிடுக – முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை  வலியுறுத்தல்..!

பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகபாண்டியை இது போன்று துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றது. நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் இருந்து, காவலர் ஒருவர் அந்த பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தின் நடத்துநர் அந்த காவலரிடம் டிக்கெட் கேட்டபோது அந்த காவலர் டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார்.

அரசு பேருந்தில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எவரும் பணி நிமித்தமாக பயணிக்கும்போது டிக்கெட் எடுக்கத் தேவையில்லை. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான், எங்களுக்கும் டிக்கெட் கிடையாது எனக் கூறி டிக்கெட் எடுக்க மறுத்தார்.இதனைத் தொடர்ந்து நடத்துநர், அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். வாரண்ட் இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறினார். எனினும், அவரது பேச்சை ஏற்க மறுத்த காவலர், “எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாங்க. போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் எங்கு வேண்டுமானாலும் கட்டணம் இன்றி பயணம் செய்கிறார்களே.. நாங்கும் அரசு ஊழியர்கள் தான். எனவே டிக்கெட் எடுக்க முடியாது” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, நடத்துநர், பேருந்தை ஒரு இடத்தில் நிறுத்தச் சொல்லி, டிக்கெட் எடுக்காவிட்டால் பேருந்தை எடுக்க முடியாது எனக் கூறினார். தலைமைக் காவலர் ஒருவர் வந்து, வாரண்ட் இல்லாமல் கட்டணம் இன்றி பயணிப்பது சரியல்ல, எனக் கூறி, காவலரை டிக்கெட் எடுக்குமாறு கூறினார்.

அப்போதும், அந்தக் காவலர், “எல்லா அரசு ஊழியர்களுக்கும் ஒரே ரூல்ஸ் தான். போக்குவரத்து துறை ஊழியர்களை மட்டும் இலவசமாக பயணிக்க அனுமதிக்கிறீர்கள், நான் டிக்கெட் எடுக்க மாட்டேன். பஸ்ஸை விட்டு இறங்க முடியாது” வாக்குவாதம் செய்தார்.

இதையடுத்து, பயணி ஒருவர் காவலரிடம் நானே உங்களுக்கும் டிக்கெட் எடுக்கிறேன், பிரச்சனையை விடுங்கள் எனக் கூற, காவலர் அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. பயணிகள் தலையிட்டு சமாதானம் பேசிய நிலையில், பின்னர் அந்த காவலர் டிக்கெட் எடுப்பதாக கூறியதும் பேருந்து அங்கிருந்து கிளம்பியது. அரசுப் பேருந்தில் காவலருக்கும், நடத்துநருக்கும் இடையே நடந்த இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

இதையடுத்து அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்

 இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,கடந்த 2021 – 2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகப்பாண்டி அவர்களை, இது போன்று துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

முதல்-அமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்துக்காக, காவலர் ஆறுமுகப்பாண்டி அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.

Leave your comments here...