ஜாமீனுக்காக வேண்டுமென்றே ஸ்வீட் சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கேஜ்ரிவால் – அமலாக்கத்துறை குற்றச்சாட்டு..!

இந்தியா

ஜாமீனுக்காக வேண்டுமென்றே ஸ்வீட் சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கேஜ்ரிவால் – அமலாக்கத்துறை குற்றச்சாட்டு..!

ஜாமீனுக்காக வேண்டுமென்றே ஸ்வீட் சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கேஜ்ரிவால் – அமலாக்கத்துறை குற்றச்சாட்டு..!

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உட்கொள்கிறார் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. சர்க்கரை நோயாளியான அவர் தனது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வகையில் இவ்வாறு செய்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தற்போது திஹார் சிறையில் உள்ள கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் 23-ம் தேதி வரை நீட்டித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். அவர் அவருடைய மருத்துவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கேஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவு அடிக்கடி மாறுபடுவதாகக் கூறி இந்தக் கோரிக்கையை அவரது தரப்பு முன்வைத்துள்ளது. வாரத்தில் 3 நாட்கள் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் மருத்துவரிடம் ஆலோசிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர் ஜோஹப் ஹுசைன், “ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகக் கூறும் நபர் சிறையில் தினமும் மாம்பழங்கள் சாப்பிடுகிறார், இனிப்பு வகைகள், சர்க்கரை கலந்த தேநீர் என உட்கொள்கிறார். தனது ரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டதாகக் கூறி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் கோரும் முனைப்போடு வேண்டுமென்றே கேஜ்ரிவால் இவ்வாறு செய்கிறார்” என்றார்.

இதனை எதிர்த்த கேஜ்ரிவாலின் வழக்கறிஞர் விவேக் ஜெயின், “ஊடகங்களுக்கு தீனி போட வேண்டும் என்பதற்காகவே அமலாக்கத் துறை இத்தகைய வாதத்தை முன்வைத்துள்ளது. கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெறுகிறேன். வேறொரு மேம்பட்ட மனு தாக்கல் செய்யப்படும்” என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கேஜ்ரிவாலின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கூறி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். மருத்துவ ஆலோசனைக்கான அவரது மனுவால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Leave your comments here...