174 தொழில்நுட்ப படிப்புகளுக்கான பாடங்களை தமிழில் மொழி பெயர்ப்பு – சென்னை ஐஐடி…!

தமிழகம்

174 தொழில்நுட்ப படிப்புகளுக்கான பாடங்களை தமிழில் மொழி பெயர்ப்பு – சென்னை ஐஐடி…!

174 தொழில்நுட்ப படிப்புகளுக்கான பாடங்களை தமிழில் மொழி பெயர்ப்பு –  சென்னை ஐஐடி…!

நிரலாக்கம், தரவு அமைப்புகள், பைத்தானைப் பயன்படுத்தி படிமுறைத் தீர்வு (Programming, Data Structures and Algorithms Using Python) போன்ற அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படிப்புகள் உள்பட 174 தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பாடங்களை சென்னை ஐஐடி என்பிடெல் தமிழில் மொழிபெயர்த்துள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: நிரலாக்கம், தரவு அமைப்புகள், பைத்தானைப் பயன்படுத்தி படிமுறைத் தீர்வு (Programming, Data Structures and Algorithms Using Python) போன்ற அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படிப்புகள் உள்பட 174 தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பாடங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் உள்ள பாடங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்காக 682 மொழிபெயர்ப்பாளர்கள், 51 தரக்கட்டுப்பாடு (QC) நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டு மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர, மொத்தம் 159 தமிழ் இ-புத்தகங்கள் என்பிடெல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் தமிழில் கற்போருக்கு கூடுதல் பாடத்தொகுதிகள் கிடைக்கின்றன. மேலும், 906 மணி நேரத்திற்கு வீடியோ உள்ளடக்கத்திற்கான ஆடியோ உட்பொதிகளும் கிடைக்கின்றன. மொழிபெயர்க்கப்பட்ட பாடங்களை அணுகுதல் மற்றும் புரிதல் குறித்து கற்போரிடம் இருந்து சாதகமான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

என்பிடெல் பாடங்கள் அசாம், வங்கம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய 11 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பிராந்திய மொழிகளில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, தொழில்நுட்பக் கல்விக்காக ஆங்கிலத்திற்கு மாறும் மாணவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

இதுகுறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் என்பிடெல்லின் மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் பற்றிய விவரங்களை கீழ்க்காணும் இணையப்பக்கத்தில் காணலாம் – https://nptel.ac.in/translation

தொழில்நுட்பப் பாடங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சி குறித்து எடுத்துரைத்த என்பிடெல் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், ஐஐடி மெட்ராஸ் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் பேராசிரியருமான ராஜேஷ்குமார், “ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென தனி உலகம் உண்டு. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் என் உலகத்தின் எல்லைக்குள்ளேயே முடங்கி விடுவேன். அந்தத் தடையைத் தகர்த்தெறிவதற்கான முயற்சியில் என்பிடெல் ஈடுபட்டுள்ளது” என்றார்.

என்பிடெல் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், ஐஐடி மெட்ராஸ் ரசாயனப் பொறியியல் துறையின் ஆசிரியருமான பேராசிரியர் அபிஜித் பி.தேஷ்பாண்டே கூறுகையில், “மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் இந்தியாவில் கல்வி கற்போருக்கு கிடைக்க என்பிடெல்-சென்னை ஐஐடி புதுமையான வழிகளைப் பின்பற்றியுள்ளது. ubtitles, video Text tracks, Transcripts, Books with slides, Audio tracks போன்றவை இதில் அடங்கும். அறிவியல்/பொறியியல் உள்ளடக்கத்தின் உயர்தர மொழிபெயர்ப்பில் இந்தியாவின் திறனை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்” எனத் தெரிவித்தார்.

Leave your comments here...