போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் விவகாரம்… 11 மணி நேரம் விசாரணை – இயக்குனர் அமீரிடம் என்சிபி சரமாரி கேள்வி..!

இந்தியாதமிழகம்

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் விவகாரம்… 11 மணி நேரம் விசாரணை – இயக்குனர் அமீரிடம் என்சிபி சரமாரி கேள்வி..!

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் விவகாரம்… 11 மணி நேரம் விசாரணை – இயக்குனர் அமீரிடம் என்சிபி சரமாரி கேள்வி..!

டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உணவு பொருட்களை ஏற்றுமதி செய்வதாக ஏமாற்றி ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இப்படி போதைப்பொருள் கடத்தலில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் ஜாபர் சாதிக் சுருட்டி இருப்பது பற்றி தெரிய வந்ததால் இதன் பின்னணி பற்றி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இயக்குனர் அமீர் அவரோடு சேர்ந்து ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்கிற திரைப்படம் ஒன்றையும் தயாரித்து வந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளராக ஜாபர் சாதிக்கும் இயக்குனராக அமீரும் இருந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஓட்டல் ஒன்றையும் இருவரும் கூட்டாக தொடங்கி நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி அதிகாரிகளிடம் பிடிபட்டார். இதனால் இயக்குனர் அமீருக்கும், ஜாபர் சாதிக்குக்கும் எந்த மாதிரியான தொடர்புகள் இருந்தன? என்பது பற்றி இயக்குனர் அமீரிடம் டெல்லியில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

இதற்காக சம்மன் அனுப்பி இயக்குனர் அமீரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேரில் வரவழைத்திருந்தனர். டெல்லியில் உள்ள போதைப்பொருள் அலுவலகத்துக்கு நேற்று காலை 10 மணி அளவில் அமீர் சென்று இருந்தார்.ஆனால் அதிகாரிகள் அவரை 11.30 மணி அளவிலேயே விசாரணைக்காக அழைத்தனர்.

இதன் பின்னர் அமீரிடம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். இரவு 10.20 மணிக்கு அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்தது.இதன் மூலம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர்.

ஜாபர் சாதிக்குடன் ஏற்பட்டிருந்த பழக்கம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் அமீர், சினிமா வட்டாரத்தில் மற்றவர்களுடன் பழகியது போலவே ஜாபர் சாதிக்குடன் பழகி வந்ததாகவும், போதைப்பொருள் கடத்தலில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது? என்பது பற்றிய ஆலோசனையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இயக்குனர் அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறும்போது, அமீர் மீது கைது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அமீர் சென்னை திரும்பியுள்ளார்.போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் பலருக்கு சம்மன் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சினிமா மற்றும் அரசியலில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ள அதிகாரிகள், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

இயக்குனர் அமீர் விளக்கம் :- தொடர்ந்து பத்திரிகையாளர்கள், டெல்லியில் நடந்த விசாரணை தொடர்பான தகவல்களை கேட்பதற்காக தொடர்பு கொண்டனர். இதையடுத்து தனது செல்போன் ஸ்டேட்டஸ் மூலமாக அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதுவரை யாரும் என்னை அழைக்க வேண்டாம்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...