9-ந்தேதி முதல் தமிழகத்தில் பிரதமர் மோடி 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் – 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்பு..!

அரசியல்

9-ந்தேதி முதல் தமிழகத்தில் பிரதமர் மோடி 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் – 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்பு..!

9-ந்தேதி முதல் தமிழகத்தில் பிரதமர் மோடி  4 நாட்கள் தேர்தல் பிரசாரம் – 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்பு..!

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலை யில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது.

தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் தலைவர்களுமே அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தேசிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் ஆகியோரும் தங்கள் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகத்துக்கு வர உள்ளனர்.பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி தமிழகத்துக்கு 5 முறை வந்து பிரசாரம் மேற்கொண்டார். அவர் இதுவரை கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கோவையில் நடந்த பிரமாண்ட ரோடு ஷோவிலும் பங்கேற்றார். மேலும் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வர இருக்கிறார். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் 4 நாட்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 9-ந்தேதி, 10-ந்தேதி, 13-ந்தேதி, 14-ந்தேதி ஆகிய 4 நாட்கள் அவர் தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்.

வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வரும் பிரதமர் மோடி அன்று மாலை 4 மணிக்கு வேலூரில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். அப்போது தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி, கிருஷ்ணகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மன், கள்ளக்குறிச்சி தொகுதி பா.ம.க. வேட்பாளர் தேவதாஸ், திருவண்ணாமலை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமன், ஆரணி தொகுதி பா,ம.க. வேட்பாளர் கணேஷ் குமார், சிதம்பரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினி, கடலூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சான் ஆகியோருக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்கிறார்.

அன்று மாலை 6 மணிக்கு தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட தி.நகரில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். அப்போது மத்திய சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் செல்வம், வடசென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பால் கனகராஜ், திருவள்ளூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.பாலகணபதி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் வேணுகோபால், காஞ்சிபுரம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், அரக்கோணம் தொகுதி பா.ம.க வேட்பாளர் கே.பாலு ஆகியோருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்கிறார்.

பின்னர் மறுநாள் 10-ந்தேதி காலை 11 மணிக்கு நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய மந்திரியுமான முருகனுக்கு ஆதரவாக அங்கு ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து அன்று மதியம் கோவையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். அந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவரும் கோவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான அண்ணாமலை மற்றும் பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அதன் பிறகு பிரதமர் மோடி மீண்டும் 13-ந்தேதி தமிழகம் வருகிறார். அன்று காலை 11 மணிக்கு பெரம்பலூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அப்போது கூட்டணி கட்சி வேட்பாளரான ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர் மற்றும் திருச்சி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

பின்னர் 14-ந்தேதி விருதுநகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். அப்போது பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இந்த பொதுக்கூட்டங்களில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஏற்கனவே 5 முறை வந்துள்ள நிலையில் இன்னும் 4 நாட்கள் அவர் பிரசாரம் செய்ய உள்ளதால் அடுத்த வாரம் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிரம் அடைய உள்ளது.

Leave your comments here...