மக்களவை தேர்தல் 2024 – பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்..!

அரசியல்

மக்களவை தேர்தல் 2024 – பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்..!

மக்களவை தேர்தல் 2024 – பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்..!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகி உள்ளது. 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது அதன்படி, கோவையில் அண்ணாமலையும், தென் சென்னையில் தமிழிசையும், நீலகிரியில் எல்.முருகனும் போட்டியிடுகின்றனர். பட்டியல்:

தென் சென்னை – தமிழிசை சவுந்தரராஜன்
மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்
வேலூர் – ஏ.சி. சண்முகம்
கிருஷ்ணகிரி – சி.நரசிம்மன்
நீலகிரி – எல்.முருகன்
கோவை – அண்ணாமலை
பெரம்பலூர் – பாரிவேந்தர்
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். கடந்த 2014-ம் ஆண்டு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த அவர், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார். கட்சியில் மிகுந்த அனுபவமும், பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வந்த அவருக்கு இந்த மக்களவைத் தேர்தலில், மீண்டும் கன்னியாகுமரியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை: பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்து வருகிறார். அவர் பதவியேற்ற காலம் முதல் பாஜகவை தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அவர் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டார்.

இந்த யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில், தற்போது அவர் கோவையில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன்: கடந்த நான்கரை ஆண்டு காலமாக தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 18-ம் தேதி அவர் தான் வகித்துவந்த இரு மாநில ஆளுநர் பதவிகளையும் ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து மீண்டும் பாஜகவில் இணைந்தார். அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் தென் சென்னையின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வினோஜ் பி.செல்வம்: பாஜகவின் மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வம். கடந்த 2007-ம் ஆண்டு முதல் பாஜகவில் இருந்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், துறைமுகம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தொடர்ந்து கட்சியின் பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட வந்தவருக்கு தற்போது மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏ.சி.சண்முகம்: புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, கூட்டணியில் இணைந்தார். இம்முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் மீண்டும் வேலூர் தொகுதியில் களம் காண்கிறார்.

எல்.முருகன்: மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின்போது மாநில பாஜக தலைவராக பதவி வகித்தார். அப்போது தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றி வாய்ப்பை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சரும் ஆனார். அவரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ளதை அடுத்து மீண்டும் அவர் ராஜ்யசபா வேட்பாளராக, மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், நீலகிரி (தனி) தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாரிவேந்தர்: இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர். கடந்த முறை நடந்த மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும், 2024 மக்களவைத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்திருந்தார். அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் அவருக்கு இம்முறை மீண்டும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன்: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுகவில் இருந்து விலகிய நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார். அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அவர் இருந்து வருகிறார். அவருக்கு வரும் மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில தினங்களாக நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பாஜக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் : பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. முன்னதாக, வெளியிடப்பட்டிருந்த பட்டியலில் நயினார் நாகேந்திரனுக்கு தூத்துக்குடி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு திருநெல்வேலி தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...