தேர்தல் பத்திரங்கள் விவரம் – தேர்தல் ஆணையத்திடம் அளித்தது எஸ்பிஐ..!

இந்தியா

தேர்தல் பத்திரங்கள் விவரம் – தேர்தல் ஆணையத்திடம் அளித்தது எஸ்பிஐ..!

தேர்தல் பத்திரங்கள் விவரம் – தேர்தல் ஆணையத்திடம் அளித்தது எஸ்பிஐ..!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் ஆணையத்தின் வேலை நேரம் முடிவதற்குள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி எஸ்பிஐ விவரங்களை சமர்ப்பித்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. “நீதிமன்ற உத்தரவின்படி இன்றைய தினம் (மார்ச் 12) தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியுள்ளது” என எக்ஸ் தளத்தில் தேர்தல் ஆணையம் பதிவிட்டுள்ளது. அதில் உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் தேர்தல் பத்திர விவரங்கள் அடங்கிய நகல் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

கடந்த 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2018-ல் நடைமுறைக்கு வந்தது. இதனை குறிப்பிட்ட சில வங்கிக் கிளைகளில் மட்டுமே எஸ்பிஐ விற்பனை செய்து வந்தது. ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரையில் இந்த பத்திரங்கள் பல்வேறு மதிப்புகளில் விற்பனை செய்யப்பட்டன. அந்த வகையில் 6 ஆண்டு காலம் விற்பனை செய்த தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரத்தை சுமார் 30 பிரிவுகளாக தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.16,518 கோடி எனத் தெரிகிறது. எஸ்பிஐ சமர்ப்பித்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதிக்குள் அதன் இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.

தேர்தல் பத்திரங்கள் விவரம் தேர்தல் பத்திரங்கள் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது. கடந்த 2019 முதல் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்தது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.

‘இந்த தகவல்களை திரட்டி, வகைப்படுத்தி தருவது சிக்கலான நடவடிக்கை. இதற்கு, ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ சார்பில் மார்ச் 4-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கிடையே, கூடுதல் அவகாசம் கேட்டு எஸ்பிஐ தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு திங்கள்கிழமை (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி கூறியது: ‘தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுமாறு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவிட்டோம். கடந்த 26 நாட்களாக எஸ்பிஐ அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். அதுபற்றி எதையும் தெரிவிக்கவில்லை.

பல்வேறு கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டபோதிலும் அதுதொடர்பான அனைத்து தகவல்களும் மும்பையில் உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, அதில் இருந்து தகவல்களை தொகுத்து தருவது சுலபமான காரியம்தான்.

ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் உள்ள சில ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். நாங்கள் கேட்ட விவரங்களை வழங்குவது எஸ்பிஐ போன்ற மிகப்பெரிய வங்கிக்கு கடினமான வேலை அல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற பணிகளை எஸ்பிஐ குறித்த நேரத்தில் நிறைவேற்றியுள்ளது. அப்படி இருக்க, தேர்தல் பத்திர விவகாரத்தில் அவகாசம் கோருவது ஏன்?

எஸ்பிஐ வங்கியிடம் நேர்மையான செயல்பாட்டை எதிர்பார்க்கிறோம். தேர்தல் பத்திர விவரங்களை தற்போது வெளியிட வேண்டியது அவசியம். எங்கும் இணையமயமாகிவிட்ட இந்த சூழலில் தகவலை திரட்டுவது முடியாத காரியமும் அல்ல. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒரு வங்கி அதிகாரி மேல்முறையீடு செய்வது மிகவும் தீவிரமான விஷயம், கண்டனத்துக்குரியது.

எனவே, எஸ்பிஐ விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நிதி தொடர்பான அனைத்து விவரங்களையும் மார்ச் 12-ம் தேதி மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமர்ப்பிக்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதிக்குள் அதன் இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட வேண்டும். விவரங்களை கொடுக்க தவறினால் எஸ்பிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தலைமை நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தது.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் வரை தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடாமல் செய்யும் பாஜகவின் முயற்சியாகவே எஸ்பிஐ மூலம் கால அவகாசம் கோரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...