லஞ்சம் பெற்ற வழக்கில் ED அதிகாரி அங்கித் திவாரிக்கு 7வது முறையாக காவல் நீட்டிப்பு..!

தமிழகம்

லஞ்சம் பெற்ற வழக்கில் ED அதிகாரி அங்கித் திவாரிக்கு 7வது முறையாக காவல் நீட்டிப்பு..!

லஞ்சம் பெற்ற வழக்கில் ED அதிகாரி அங்கித் திவாரிக்கு 7வது முறையாக காவல் நீட்டிப்பு..!

அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கூறி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை கடந்த டிசம்பர் 1ஆம் தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அமலாக்கத்துறையின் மதுரை அலுவலகத்திற்குள் சென்று தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி இரண்டு முறை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் 2 முறையும் தள்ளுபடியானது. உயர் நீதிமன்ற மதுரை கிளையும் அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை மீண்டும் மீண்டும் தள்ளுபடி செய்தது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் அங்கித் திவாரி மீது டெல்லி அமலாக்கத்துறை ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் துறை ரீதியாக தங்களது கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதி கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், அங்கித் திவாரியை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதில் பல அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து கண்டறிய முடியும் என லஞ்ச ஒழிப்புத்துறை வாதிட்டது. தொடர்ந்து அமலாக்கத்துறையின் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

இதற்கிடையே, அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் 6 முறை நீட்டிக்கப்பட்டிருந்தது. அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி மோகனா முன்பாக, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி காணொளிக் காட்சி வாயிலாக இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, நீதிபதி மோகனா, அங்கித் திவாரிக்கு நீதிமன்றக் காவலை வரும் மார்ச் 20ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம், 7வது முறையாக அங்கித் திவாரிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...