இந்திய நிறுவனங்களின் ஆப்கள் “கூகுள் ப்ளே” ஸ்டோரில் இருந்து நீக்குவதை அனுமதிக்க முடியாது – மத்திய அரசு திட்டவட்டம்..!

இந்தியா

இந்திய நிறுவனங்களின் ஆப்கள் “கூகுள் ப்ளே” ஸ்டோரில் இருந்து நீக்குவதை அனுமதிக்க முடியாது – மத்திய அரசு திட்டவட்டம்..!

இந்திய நிறுவனங்களின் ஆப்கள் “கூகுள் ப்ளே” ஸ்டோரில் இருந்து நீக்குவதை அனுமதிக்க முடியாது – மத்திய அரசு திட்டவட்டம்..!

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்திய நிறுவனங்களின் ஆப்கள் நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது’ என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.

ப்ளே ஸ்டோரில் உள்ள ஆப்கள் மூலம் தொழிலில் ஆதாயம் பெறும் இந்திய நிறுவனங்கள் 11 முதல் 26 சதவீத சேவைக் கட்டணம் செலுத்த கூகுள் நிறுவனம் வலியுறுத்தியது. இதுதொடர்பாக இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடின. ஆனால் உச்ச நீதிமன்றம் கூகுளுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து, கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சில முன்னணி மேட்ரிமோனி உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் ஆப்களை நீக்கியது. இதற்கு மேட்ரிமோனி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து மத்திய  தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. இன்று இந்தியாவில் 1 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி உள்ளன.

இவை இந்திய பொருளாதாரத்திற்கு முக்கியமானவை. எனவே எந்த பெரிய தொழில்நுட்ப நிறுவனத்திடமும் அவர்களின் தலைவிதியை விட்டு விட முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கூகுள் மற்றும் அதன் டெவலப்பர்களுடன் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளோம். இந்திய நிறுவனங்களின் ஆப்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்குவதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும்’’ என்றார்.

இதுகுறித்து கூகுள் வெளியிட்ட அறிவிப்பில், “கட்டணம் வசூலிக்க கூகுள் நிறுவனத்துக்கு எந்த தடையும் எந்த நீதிமன்றங்களும் விதிக்கவில்லை. எங்களுக்கு உரிமையுள்ள தொகையை கேட்டும் இதுவரை தராத நிறுவனங்களின் செயலிகளே நீக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் நேரம் கொடுத்தும் கட்டணத்தை செலுத்த தவறிவிட்டன. எனவேதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கிய செயலிகளில் இந்தியாவின் பிரபலமான வேலை தேடுவோருக்கான செயலியான naukri.com, ரியல் எஸ்டேட் சேவைக்கான செயலியான 99acres.com, திருமண சேவைக்கான bharatmatrimony.com மற்றும் shaadi.com உள்ளிட்டவை அடங்கும்.

ப்ளே ஸ்டோரில் நீக்கப்பட்ட ஆப்கள் மீண்டும் சேர்ப்பு
மத்திய அமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில், கூகுள் நிறுவனத்தினால் நீக்கப்பட்ட சில ஆப்கள் மீண்டும் ப்ளே ஸ்டோருக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நவ்க்ரி, 99ஏக்கர்ஸ் உள்ளிட்டவை மீண்டும் ப்ளே ஸ்டோரில் வந்துள்ளன. இது குறித்து இன்போ எட்ஜ் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தானி தனது டிவிட்டர் பதிவில், “பல இன்போ எட்ஜ் ஆப்கள் மீண்டும் ப்ளே ஸ்டோரில் வந்துள்ளன” என்று உறுதிபடுத்தியுள்ளார்.

Leave your comments here...