தவறான ஆட்சி.. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர்… மேற்கு வங்கத்தில் குற்றங்களும் ஊழலும் அதிகரித்துவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

அரசியல்

தவறான ஆட்சி.. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர்… மேற்கு வங்கத்தில் குற்றங்களும் ஊழலும் அதிகரித்துவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

தவறான ஆட்சி.. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர்… மேற்கு வங்கத்தில் குற்றங்களும் ஊழலும் அதிகரித்துவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

மேற்கு வங்கத்தின் இருந்த புகழை திரிணமூல் காங்கிரஸ் கெடுத்துவிட்டது. இது ஒவ்வொரு திட்டத்தையும் ஒரு மோசடியாக மாற்றுகிறது. அவர்கள் எங்கள் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி அதை அவர்களுடையது என்று அழைக்கிறார்கள். மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சியின் காரணமாக மேற்கு வங்கத்தில் குற்றங்களும் ஊழலும் அதிகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ. 7,200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அம்மாநில ஆளுநர் ஆனந்தபோஸ், முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர்.

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான இன்று, நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணா நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைத்தும் பிரதமர் உரையாற்றினார்.

அப்போது அவர், “உள்கட்டமைப்பு கண்ணோட்டத்தில், ரயில்வே மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற வரலாற்றின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு முன்னேறுவதற்கான வாய்ப்புகளை வங்கத்தால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. வளர்ச்சிக்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இருந்தும் வங்கம் பின்தங்கியே இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில், அந்த இடைவெளியைக் குறைக்க இங்குள்ள ரயில் கட்டமைப்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. இன்று நமது அரசு, வங்கத்தின் ரயில் கட்டமைப்புக்கு முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக செலவு செய்கிறது” எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “பொதுக்கூட்டத்துக்கு வந்துள்ள தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே நீங்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் வந்திருக்கிறீர்கள். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதற்கான தெளிவான செய்தியை இது வழங்குகிறது. மேற்கு வங்கத்தில் இன்று நான் இரண்டாவது நாளில் இருக்கிறேன். இந்த இரண்டு நாட்களில் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.22 ஆயிரம் கோடிக்கும் அதிகமான திட்டங்களை வழங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாட்டால் மக்கள் மிகப் பெரிய அளவில் அதிருப்தி அடைந்துள்ளனர். அந்த கட்சிக்கு மக்கள் தொடர்ச்சியாக வாக்களித்தும்கூட, அது அராஜகங்களில் ஈடுபட்டு முதுகில் குத்திவிட்டது. வங்கத்தை வளர்ச்சிபெறச் செய்வது அல்ல திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நோக்கம். ஊழலும் வாரிசு அரசியலும்தான் அதன் முன்னுரிமை. மக்களை ஏழ்மையிலேயே வைத்திருக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அப்போதுதான், அது தனது கொள்கைகளைத் தொடர முடியும்; விளையாட்டைத் தொடர முடியும்.

சில நாட்களுக்கு முன்பு நாடியா மாவட்டம் கல்யாணியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை என்னால் திறக்கப்பட்டது. எய்ம்ஸ் கட்டுவதை சிக்கல் என்று மேற்கு வங்க அரசு பார்க்கிறது. அதனால்தான், ஏன் சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்று அவர்கள் கேட்கிறார்கள். மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரசின் குண்டர்களும், நில மாஃபியாக்களும் அராஜகத்துடன் நடந்து கொள்ள வெளிப்படையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மம்தா பானர்ஜி அரசு சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிகளில் தடைகளை உருவாக்குகிறது.

மத்திய அரசு ஏழைகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டு உதவிகளை வழங்குகிறது. ஆனால், மேற்கு வங்க மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. காரணம், அதற்கான அனுமதியை மம்தா அரசு வழங்க மறுக்கிறது. மேற்கு வங்கத்தின் மருத்துவ நிலையை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். 2014-க்கு முன், வங்கத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து 26 ஆக அதிகரித்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் அரசு வங்கப் பெண்களை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தியது. ஆனால், பெண்கள் அனைவரும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி முறையால் அதிருப்தி அடைந்துள்ளனர். சந்தேஷ்காலியில் பெண்கள் நீதி கேட்டு போராட்டங்களை நடத்தியபோதும், அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. வங்கத்தில், ஒரு குற்றவாளி எப்போது கைது செய்யப்பட வேண்டும் என்பதை காவல்துறை முடிவு செய்வதில்லை, குற்றவாளி தான் எல்லாவற்றையும் தானே தீர்மானிக்கிறார். சந்தேஷ்காலி சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதை மாநில அரசு விரும்பவில்லை.

மேற்கு வங்கத்தின் இருந்த புகழை திரிணமூல் காங்கிரஸ் கெடுத்துவிட்டது. இது ஒவ்வொரு திட்டத்தையும் ஒரு மோசடியாக மாற்றுகிறது. அவர்கள் எங்கள் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி அதை அவர்களுடையது என்று அழைக்கிறார்கள். வரவிருக்கும் ஆண்டுகளில், முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான எண்ணற்ற வாய்ப்புகளை பாஜக உருவாக்கும். இதற்கு, மக்களவைத் தேர்தலில் மக்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Leave your comments here...