சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் – இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை..!

விளையாட்டு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் – இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை..!

சர்வதேச டெஸ்ட்  கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் – இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை..!

டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஜாக் க்ராவ்லியின் விக்கெட்டை வீழ்த்தி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார் அஸ்வின்.

விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு தவறியது. இந்த நிலையில், ராஜ்கோட்டில் முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து விளையாடி வருகிறது. இதில் ஜாக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பென் டக்கெட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த வேளையில் ஜாக் க்ராவ்லி 15 ரன்கள் எடுத்து பொறுமையாக விளையாடினார்.

இந்தக் கூட்டணியை பிரித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்த சமயத்தில் அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார். அதன்படி வீசிய முதல் ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த அஸ்வின், தனது இரண்டாவது ஓவரில் ஜாக் க்ராவ்லி வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.

98-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், குறைந்த போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தினார்.

அதேநேரம், இந்த சாதனையை படைப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500+ விக்கெட்களை வீழ்த்திய ஒன்பதாவது பவுலர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே, லயன் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த சாதனையை இதற்கு முன்னர் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் இரண்டாவது பவுலர் ஆனார் அஸ்வின். அனில் கும்ப்ளே 619 விக்கெட்களை வீழ்த்தி முன்னணியில் உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 37 வயதான அஸ்வின், கடந்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அதோடு 3,166 ரன்களை பதிவு செய்துள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 3வது பவுலராகவும், ஆல்ரவுண்டர்களில் 2-வது இடத்திலும் அஸ்வின் உள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதன் முழு விவரம்: ராஜ்கோட் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவிப்பு

Leave your comments here...