அரசின் ரகசியங்களை கசியவிட்ட வழக்கு – இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை..!

உலகம்

அரசின் ரகசியங்களை கசியவிட்ட வழக்கு – இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை..!

அரசின் ரகசியங்களை கசியவிட்ட வழக்கு – இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை..!

அரசின் ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, பரிசுப்பொருள் முறைகேடு, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்ட சிபர் வழக்கு ஆகிய வழக்குகளில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார். அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய முக்கியக் கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார். பதவி இழப்புக்குப் பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டபோது வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்களை விற்று கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியது. மேலும் அவர் அரசியலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத வண்ணம் தகுதியிழந்தார். இதையடுத்து, பரிசுப்பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைக்கு நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், அரசின் ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் துணைத் தலைவர் குரேஷிக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave your comments here...