நாடு முழுவதும் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2.21 லட்சம் கோடி சுங்கக் கட்டணம் வசூல் – மத்திய அமைச்சர் தகவல்..!

இந்தியா

நாடு முழுவதும் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2.21 லட்சம் கோடி சுங்கக் கட்டணம் வசூல் – மத்திய அமைச்சர் தகவல்..!

நாடு முழுவதும் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2.21 லட்சம் கோடி சுங்கக் கட்டணம் வசூல் – மத்திய அமைச்சர் தகவல்..!

இந்தியா முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகள் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2.21 லட்சம் கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.

அதில் கடந்த 2015 -2016ல் இருந்து 2023நவம்பர் வரையிலான 8 ஆண்டு, 8 மாதங்களில் நாடு முழுவதும் உள்ள 950க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் ரூ.2,57,963 கோடி சாலை கட்டணம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-2016ம் ஆண்டில் ரூ.17,759 கோடியாக இருந்த சுங்கக்கட்டணம் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் சுங்கக்கட்டணம் ரூ.36,378 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 65 சுங்கச் சாவடிகளிலும் ஆண்டுதோறும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  கடந்த 2020-21ல் இருந்து 2022 -23 வரையிலான 3 ஆண்டுகளில் ரூ.8,846 கோடி வசூலாகி உள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 2020-21ல் இருந்து 2023 நவம்பர் வரையிலான 3 ஆண்டு 8 மாதங்களில் மொத்தம் ரூ.11,657 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 7,000 கிமீ நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 65 இடங்களில் சாலை சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், 18,459 கிமீ நீள நெடுஞ்சாலைகளை கொண்ட மராட்டியத்தில் 69 சாலை சுங்கச்சாவடிகள் மட்டுமே உள்ளன.தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடியில் தான் அதிக சுங்கக்கட்டணம் வசூலாகிறது.

2022-2023ம் நிதியாண்டில் பாளையம் சாலை சுங்கச் சாவடியில் ரூ.261.18 கோடியும், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ரூ.235 கோடியும் விக்கிரவாண்டியில் ரூ.164 கோடியும் வசூலாகி உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமலூர் கொட்டகவுண்டன்பட்டியில் ரூ.155 கோடி, கோவை கணியூரில் ரூ.152 கோடி, பரனூரில் .ரூ.144.27 கோடியும் வசூலாகி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 65 சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வசூலாகும் 13 சாவடிகள் உள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Leave your comments here...